பதிவு செய்த நாள்
02
ஜூலை
2013
11:07
சென்னிமலை: காங்கேயம் அருகே சிவன்மலை சுப்பிரமணியசுவாமி கோவில், பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது .திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்த சிவன்மலை சுப்பிரமணியசுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு மலை மீது முருக கடவுள் பக்தர்களுக்கு, அருள்பாலித்து வருகிறார். மலை மீது அமைந்துள்ள இக்கோவிலுக்கு படிக்கட்டுகள் மூலம் செல்லலாம். மேலும், இரண்டு கிலோ மீட்டர் தூரம் அமைக்கப்பட்டுள்ள தார் சாலை வழியாக வாகனங்களிலும் சென்று வரலாம். தினமும், தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருவார்கள்.அமாவாசை, பவுர்ணமி மற்றும் திருமண விசேஷ நாட்களில் அதிகமாக கூட்டம் இருக்கும். குறிப்பாக தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நடக்கும் தேர்த்திருவிழாவை காண லட்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். இந்தளவுக்கு முக்கியத்துவம் பெற்ற இக்கோவிலுக்கு, தற்போது பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.இதுபற்றி, கோவில் செயல் அலுவலர் நந்தகுமார் கூறியதாவது:கோவிலின் உள்பகுதி, முன்பக்கம் மற்றும் மலை மீது வாகனங்கள் நிறுத்துமிடம் என மொத்தம், 7 கேமராக்கள் பொருத்தப்பட்டு, மர்ம நபர்கள் நடமாட்டம் கண்காணிக்கப்படும். இக்கண்காணிப்பு கேமராக்கள் மேலும், 10 பொருத்தப்படும்போது, மலையின் அனைத்து பகுதியும், கண்காணிகாணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்படும்.மேலும், கோவிலின் முக்கிய, 3 கதவுகளில் எச்சரிக்கை மணிகள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால், இக்கதவுகளை யார் தொட்டாலும், மணி ஒலிக்கும். இந்த சங்கு ஒலி மலை அடிவாரம் வரை கேட்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது, என்றார்.