பதிவு செய்த நாள்
05
ஜூலை
2013
11:07
சுசீந்திரம்.: சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் சுவர்களில் வரையப்பட்டுள்ள மூலிகை ஓவியங்கள் விரைவில் மெருகூட்டப்பட உள்ளன. இதற்கான ஆய்வுக்குழு இந்த மாதம் கோயிலை பார்வையிடுகிறது. தமிழகத்தில் அனைத்து கோயில்களிலும் உள்ள பச்சிலை மற்றும் மூலிகை ஓவியங்கள் மெருகூட்டப்பட உள்ளன. இதன் முதற்கட்டமாக, சுசீந்திரம் மற்றும் திருவட்டார் கோயில்களில் உள்ள பச்சிலை ஓவியங்களை ஆய்வு செய்ய, தமிழக அரசு குழு அமைத்துள்ளது. பச்சிலை மற்றும் மூலிகைகளை அரைத்து வண்ணம் மாறாமல் வரையும் ஓவியக்கலை பண்டைய காலக்கட்டங்களில் நடைமுறையில் இருந்துள்ளது. மன்னர் காலங்களில் கோயில்களின் கோபுர உட்பகுதியில் இந்த பச்சிலை ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. காலத்தாலும் அழியாத இந்த கலை ஓவியங்கள், பார்ப்போரை இன்றும் வரலாற்றைப் பேச வைக்கும். ரசாயனம் கலக்காத பச்சிலை மற்றும் மூலிகைகள் ஆகியவற்றின் கலவையில் சிறந்த ஓவியக்கலை நிபுணர்களைக் கொண்டு இந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் ராஜகோபுரம் மற்றும் பிரகாரங்களில் அதிகளவில் இந்த ஓவியங்கள் உள்ளன. மேலும், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் சுவாமி கோயிலிலும் இந்த ஓவியங்கள் உள்ளன. தமிழகத்தில் அதிகமான கோயில்களில் இந்த பச்சிலை ஓவியங்கள் இருந்தாலும் சுசீந்திரம் கோயிலில் தான் நேர்த்தியாகவும், அதிகளவிலும் இந்த ஓவியங்கள் காணப்படுகின்றன. இந்த ஓவியங்கள் சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தால், கடந்த சில ஆண்டுகளாக திகிலமடைந்து காணப்படுகிறது. மேலும், சமூக விரோதிகளால் இந்த ஓவியங்கள் வரையப்பட்டிருந்த சுவர்கள் உடைக்கப்பட்டும், கீறல் விழுந்தும், மங்கிப் போயும் காணப்படுகிறது. எனவே, இவற்றை பழமை மாறாமல் புதுப்பொலிவோடு மாற்றும் பொருட்டு, தமிழக அரசு இந்த ஓவியங்களை புதுப்பிக்க தீர்மானித்தள்ளது. அதன்படி, இந்த ஓவியங்கள் மீண்டும் மூலிகை மற்றும் பச்சிலைகள் பயன்படுத்தி புதுப்பொலிவு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலைத் தேர்வு செய்து இந்த கோயிலில் ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குழுவில் தமிழக தொல்லியல் குழு ஆய்வாளர்கள், வேதியியல் துறை வல்லுனர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள், இம்மாதம் இக்கோயிலில் ஆய்வு செய்கின்றனர். தொடர்ந்து திருவட்டார் ஆதிகசவ பெருமாள் கோயிலிலும் ஆய்வு செய்கின்றனர். இதைத் தொடர்ந்து இந்த ஓவியங்கள் புதுப்பிக்கும் பணி துவங்கப்பட்டு, கண்ணாடி பெட்டகங்கள் அமைத்து இந்த மூலிகை ஓவியங்கள் பாதுகாக்கப்படுகிறது.