புதூர்: தமிழகத்தில் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ள, சுவாமி விவேகானந்தர் ரதம் மதுரைக்கு, ஜூலை 13ல் வருகிறது. விவேகானந்தரின் 150 வது ஆண்டு ஜெயந்தி விழாவை, இந்தாண்டு இளைஞர் தின விழாவாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக விவேகானத்தர் ரத ஊர்வலம் நடக்கிறது. விவேகானந்தரின் சிந்தனைகள், இளைஞர்களுக்கான நல்வழிகள், ஆன்மிக சொற்பொழிவுகளை மக்களுக்கு கூறும் வகையில் இந்த ரதம் நாடு முழுவதும் வலம் வருகிறது.தமிழகத்தில் 300 நாட்கள் பயணம் செய்யும் இந்த ரதம் ஜூலை 13ல் மதுரை வருகிறது. மதுரை ராமகிருஷ்ண மடம் சார்பில் திருவேடகத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. மறுநாள் காலை அங்கிருந்து புறப்படும் ரதம் மதுரையின் பல்வேறு பகுதிகள் வழியாக ஜூலை 15ல் ரிசர்வ்லைன் ராமகிருஷ்ண மடம் வருகிறது. அங்கு பல்வேறு தலைப்புகளில் சிறப்பு சொற்பொழிவுகள் நடக்கின்றன.ரத ஊர்வலத்தை முன்னிட்டு ஒன்பது இடங்களில் சுவாமி விவேகானந்தரின் சிலை திறப்பு விழாக்கள் நடக்கின்றன. இதற்கான ஏற்பாடுகளை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் கமலாத்மானந்தர் தலைமையில் விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.