பதிவு செய்த நாள்
06
ஜூலை
2013
10:07
திருநெல்வேலி: சங்கரன்கோவில் ஆடித்தபசு விழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. சங்கரன்கோவில் ஆடித்தபசு விழா 12ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடக்கிறது. இத்திருவிழா முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் தலைமை வகித்து கலெக்டர் சமயமூர்த்தி பேசியதாவது: ஆடித்தபசு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். 22ம் தேதி தபசு காட்சியன்று லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, கோயில் வளாகம் முழுவதும் தட்டுப்பாடின்றி குடிநீர் சப்ளை செய்யவும், அதிக கூட்ட நெரிசல் ஏற்படும் இடங்களில் கண்டிப்பாக தற்காலிக கடைகள் அமைக்க தடை விதிக்க வேண்டும். சுகாதாரத்தை பேண தற்காலிக கழிவறைகளை ஏற்படுத்த வேண்டும். சட்டம், ஒழுங்கை பராமரிக்க தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். முக்கியமான இடங்களை சி.சி.டி.வி காமிரா மூலம் கண்காணிக்க போலீஸ்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அருகில் உள்ள மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ் போக்குவரத்து இயக்கப்பட வேண்டும். கோயில் அருகில் சிறப்பு மருத்துவ முகாம், நடமாடும் மருத்துவ குழு அமைக்கவும், தீயணைப்பு துறை சிறப்பு வாகன வசதிகளை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார். இதில் டி.எஸ்.பி மாதவன், ஆர்.டி.ஓ பெருமாள், மண்டல நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் மோகன், தாசில்தார் அமுதா, அறநிலையத் துறை உதவி ஆணையர் கண்ணதாசன், நகராட்சி கமிஷனர் இசக்கியப்பன், நெடுஞ்சாலைத் துறை கோட்ட இன்ஜினியர் செல்வராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் துரைராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.