கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே சிந்தலக்கரை காளிபராசக்தி கோயிலுக்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி வந்தனர்.கோவில்பட்டி அருகேயுள்ள சிந்தலக்கரை ஸ்ரீகாளிபராசக்தி தவசித்தர் பீடத்தில் 29ம் ஆண்டு ஆனிமாத சக்திமாலை இருமுடி விழா மற்றும் வேள்வி பூஜை வரும் 16 மற்றும் 17ந்தேதி நடக்கிறது. இதில் முதல்நாளன்று நாட்டு நலனுக்காக அம்மனுக்கு வேள்வி பூஜையும், 42 அடி உயர வெட்காளியம்மனுக்கு 108 லிட்டர் பாலாபிஷேகமும், மகாசித்தர் வழிபாடு, மும்மத பிரார்த்தனை, வெங்கலத்தீச்சட்டி ஏந்தி தவசித்தர் பீடத்தில் ராமமூர்த்தி சுவாமிகளின் அருட்காட்சியும் நடக்கிறது. மறுநாள் தவசித்தர் பீடத்தில் ஸ்ரீராமமூர்த்தி சுவாமிகள் பூக்குழியில் இறங்கி, அம்மனுக்கு சிறப்பு பூஜையும் நடக்கிறது. இதை முன்னிட்டு கடந்த மாதம் முதல் பக்தர்கள் விரதமிருந்து சக்திமாலை அணியும் வழிபாடுகள் நடந்து வந்தது. இந்நிலையில் ஆனி மாத இருமுடி விழாவை முன்னிட்டு தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, காவாப்பட்டி மற்றும் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி ஸ்ரீகாளிபராசக்தி கோயிலுக்கு வந்தனர். இதையொட்டி 42அடி உயர வெட்காளியம்மனுக்கு வேள்விபூஜை செய்து, சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் நடந்தது. சிறப்பு பூஜைகளை ஸ்ரீராமமூர்த்தி சுவாமி செய்திருந்தார். ஏற்பாடுகளை கோயில் செயலாளர் திருக்குமரன் செய்திருந்தார்.