பதிவு செய்த நாள்
08
ஜூலை
2013
10:07
கும்பகோணம்: விஜயீந்திர தீர்த்த சுவாமிகளின் ஆராதனை மகோத்சவத்தை முன்னிட்டு, 108 வேத பண்டிதர்களுக்கு பணமுடிப்பு மற்றும் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். மந்திராலய ராகவேந்திர சுவாமிகளின் குருவுக்கு குருவாக திகழும் விஜயீந்திர தீர்த்தமஹா ஸ்வாமிகள், கும்பகோணம் சோலையப்பன் தெருவில் காவிரி நதிக்கரை ஓரத்தில் பிருந்தாவனம் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.சிறப்புகள் பெற்ற விஜயீந்திர தீர்த்த மஹா ஸ்வாமிகளின் ஆராதனை மகோத்சவ விழா, கடந்த, 5ம் தேதி பூர்வாராதனையுடன் துவங்கியது. அடுத்தநாள், ஆறாம் மிக முக்கிய நிகழ்ச்சியான மத்ய ஆராதனை நடந்தது. நேற்று உத்தர ஆராதனை நடந்து, விழா நிறைவடைந்தது.இந்த ஆராதனை விழாவிற்காக மந்திராலய பீடாதிபதிகள் சுயதீந்திரதீர்த்த சுவாமிகள், இளைய மடாதிபதி சுபுதேந்திர தீர்த்த சுவாமிகள், இருவரும் பெங்களூரிலிருந்து தனி விமானம் மூலம் தஞ்சைக்கு வந்து, அங்கிருந்து கும்பகோணத்திற்கு விஜயீந்திர தீர்த்தசுவாமிகள் மடத்திற்கு வந்தனர். முகாமிட்ட மடாதிபதிகள், இருவரும் மடத்தில் தினமும் காலை லஷ்மிநாராயணர், லஷ்மிநரசிம்மர், ஆஞ்சநேயர், கருடர், விஜயீந்திரரின் மூலபிருந்தாவனம், ராகவேந்திரரின் மிருத்திகா பிருந்தாவனம், மூலராமர்பூஜை, பூதராஜர் ஆகிய தெய்வங்களுக்கு பூஜைகள் செய்து, பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகின்றனர். மேலும் தினமும் அதிகாலை விஸ்வரூப தரிசனம், நிர்மால்ய தரிசனம், அபிஷேக, அலங்கார, தீப ஆராதனைகள், வேதகோஷங்கள் முழுங்க, தாஸரூப் பக்திப்பாடல்கள் பாடப்பெற்று அன்னதான நிகழ்ச்சி நடந்தது. ஆண்டுதோறும் இந்த ஆராதனை விழாவில், பல்வேறு துறையில் சிறப்புற்று திகழும் பலருக்கு மந்திராலய மடத்தின் சார்பில் பண முடிப்பு, விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுவது வழக்கம்.அதன்படி இவ்வாண்டில் ஆராதனை மகோத்சவத்தை முன்னிட்டு, கடந்த, 5ம் தேதி இரவு, 108 வேத பண்டிதர்களுக்கு பண முடிப்பு அளித்து, பொன்னாடை அணிவித்து கவுரவிக்கும் விழா நடந்தது.விழாவில் அகோபில மடத்தின், 46வது பட்ட ஜீயர் சுவாமிகள் பங்கேற்று, அருளாசி வழங்கினார். அவரின் முன்னிலையில் வேத பண்டிதர்கள் உள்ளிட்டோரை, மந்திராலய பீடாதிபதிகள் பணமுடிப்பு அளித்து, பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர்.மத்ய ஆராதனை விழாவில் பங்கேற்க வெளிமாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். நேற்று முன்தினம் இரவு மடத்தில் உள்ள கஸ்யப திருக்குளத்தில் தெப்ப உற்சவம் நடந்தது.நேற்று காலை, 7 மணிக்கு உத்தர ஆராதனையை முன்னிட்டு, விஜயீந்திர சுவாமிகளின் திருவுருவ சிலை பட்டண பிரவேசமாக வீதியுலா நடந்தது.