பதிவு செய்த நாள்
08
ஜூலை
2013
10:07
சத்தியமங்கலம்: பண்ணாரி மாரியம்மன் கோவிலில் நேற்று ஆனி அமாவாசையை முன்னிட்டு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலுக்கு, தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் குவிவர். நேற்று ஆனி அமாவாசை என்பதால், காலை ஆறு மணி முதலே, பண்ணாரி மாரியம்மனை தரிசிக்க பக்தர்கள் குவிந்தனர்.மதியம் உச்சி பூஜை நேரத்தில் கோவிலை சுற்றிலும், நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து, அம்மனை தரிசனம் செய்தனர். ஆனி அமாவாசையை முன்னிட்டு, நேற்று பண்ணாரி மாரியம்மனுக்கு, தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டது. சத்தியமங்கலத்தில் இருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. திம்பம் மலைப்பாதையின் முதலாவது கொண்டை ஊசி வளைவின் தொடக்கத்தில் இருந்து, நான்கு கி.மீ., தூரம் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள காட்டு பண்ணாரி என்றழைக்கப்படும், பேளேரி அம்மன் கோவிலிலும் பக்தர்கள் குவிந்து, அம்மனை தரிசித்து சென்றனர்.இதேபோல், பவானி கூடுதுறையிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. காசிக்கு அடுத்தபடியாக உள்ள பரிகார ஸ்தலம் என்பதால், அதிகாலை முதலே கூடுதுறையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கபினி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால், வறண்டிருந்த கூடுதுறையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.பொதுமக்கள் பலரும் கூடுதுறையில் குளித்து, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.