பதிவு செய்த நாள்
08
ஜூலை
2013
10:07
மஞ்சூர்: கீழ்குந்தா கிராமத்தில் நடந்த "தெவ்வப்பா திருவிழாவில், படுகரின மக்கள் திரளாக பங்கேற்று எத்தையம்மனை தரிசித்தனர்.குந்தை சீமெயில் உள்ள 14 கிராம மக்கள் ஆண்டு தோறும் கீழ்குந்தா கிராமத்தில் "தெவ்வப்பா திருவிழாவை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். நடப்பாண்டு விழா, சிறப்பு பூஜையுடன் 4ம் தேதி துவங்கியது. 5ம் தேதி மாலை 14 ஊர் கிராம மக்கள் ஒன்றிணைந்து சிறப்பு பூஜை நடத்தினர். பின், இரவு முழுவதும் பஜனை நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் காலை "பனகுடி சிவன் கோவிலில் பாரம்பரிய பூஜைகள் நடந்தது. குந்தை சீமெ பார்பத்தி அன்னமலை முருகேஷன் முன்னிலையில், 14 ஊர் தலைவர் போஜன் தலைமையில், பாரம்பரிய பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து, பனகுடியிலிருந்து எத்தையம்மன், பக்தர்கள் புடைசூழ ஊர்வலமாக, "காடெஹெத்தை கோவிலுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான "அரிகட்டுதல் நிகழ்ச்சி யில் விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் விளைந்த தானியங்களை இறைவனுக்கு படைத்து வழிப்பட்டனர். எம்.எல்.ஏ., புத்திசந்திரன், குன்னூர் எம்.எல்.ஏ., ராமசந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ., குண்டன், கீழ்குந்தா ஊர் தலைவர் வசந்தராஜன் உட்பட முக்கிய பிரமுகர்கள் பலர் பங் கேற்றனர்.