பதிவு செய்த நாள்
09
ஜூலை
2013
10:07
கோத்தகிரி: படுக மக்களின் குல தெய்வமான ஹிரோடைய்யா திருவிழா, நேற்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கடநாடு, மடித்தொரை, கம்பட்டி, ஒன்னதலை, டி. மணியட்டி, கக்குச்சி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள ஹிரோடைய்யா கோவிலில், இருந்து நேற்று காலை, பக்தர்கள் பனகுடி கோவிலுக்கு சங்கொலி எழுப்பி, ஊர்வலமாக சென்றனர். ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் நடை திறக்கப்படும் இக்கோவிலில், நெய் தீபம்ஏற்றி, முதல் கன்றுக்குட்டி ஈன்ற பசுமாட்டின் பால், காட்டுத் தேனை ஐயனுக்கு படைத்து, காணிக்கை செலுத்தி 33 கிராம பக்தர்கள் வழிப்பட்டனர். இவ்விழாவின் சிறப்பு அம்ச மாக, இன்று காலை (செவ்வாய்) கோவிலில் உள்ள கல்தூணில் எள், நெய் கலந்த தீபம் ஏற்றப்படுகிறது. தொடர்ந்து, அருகில் உள்ள "அக்க பக்க கோவிலில், காட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட மூங்கில் இழையில், தானிய தினைகளை கோர்த்து, "ஹரிக்கட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது. பொரங்காடு சீமையை தலைமை இடமாக கொண்ட தாந்தநாடு தொட்டூரில், இன்று "மண்டை தண்டு திருவிழா நடக்கிறது. வெளியூர்களில் இருந்து தாந்தநாடு தொட்டூருக்கு திருமணமாகி, முதல் ஆண் குழந்தை பெற்றெடுத்த பெண்கள், கலாச்சார உடையணிந்து, பழங்கால ஆபரணங்களை அணிந்து கோவிலை சுற்றி வலம் வருகின்றனர். தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப் படுகிறது.