பதிவு செய்த நாள்
09
ஜூலை
2013
10:07
பவானி: பவானி சங்கமேஸ்வரர் கோவிலில், 1.87 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் அனைத்தும் ஜரூராக நடந்து வருகிறது.ஈரோடு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில், பவானி சங்கமேஸ்வரர் கோவிலும் ஒன்று. காசிக்கு பின், முக்கூடல் சங்கமிக்கும் கோவில் என்பதால், தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிவது வழக்கம். இக்கோவிலில் கடந்த, 2000ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.இந்து கோவில் சாஸ்திரப்படி, 12 ஆண்டுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். எனவே, பவானி சங்கமேஸ்வரர் கோவில் இந்தாண்டு, கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.அதன்படி, கடந்த, பிப்ரவரி, 1ம் தேதி மஹா கணபதி ஹோமத்துடன் விநாயகர், முருகர், சிவன்-பார்வதி, ஆதிகேசவ பெருமாள் உட்பட பரிவார மூர்த்திகளாக, 68 விமான கலங்களுக்கு பூஜை நடத்தப்பட்டு, பாலஸ்தாபன விழா மற்றும் திருப்பணி துவக்க விழா நடந்தது.தொடர்ந்து, திருக்கோவில் நிதியில் இருந்து புதிதாக கூடுதல் தீர்த்தவாரி மண்டபம் அமைத்தல், பழைய மண்டபங்கள் புதுப்பித்தல், புதிய படிதுறைகள் கட்டும் பணி, கோவில் சுற்றியுள்ள மதில்சுவர் கட்டுதல் புதுப்பித்தல், உயர் கோபுர மின் விளக்குகள் உட்பட பல்வேறு பணிக்கு, ஒரு கோடியே, 72 லட்சம் மதிப்பில் திருப்பணிகள் ஜரூராக நடந்து வருகிறது.ராஜகோபுரம், சங்கமேஸ்வரர் சன்னதி, வேதநாயகி சன்னதி, ஆறுமுக கடவுள் சன்னதி மற்றும் ஆதிகேசவபெருமாள் சன்னதி உட்பட பல கோபுர விமானங்களுக்கு பஞ்சவர்ணம் தீட்டி புதுப்பிக்க, உபயதாரர்கள் மூலம், 15 லட்ச ரூபாய் பெறப்பட்டு, பணிகள் நடந்து வருகிறது.