பதிவு செய்த நாள்
10
ஜூலை
2013
11:07
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், பாதுகாப்பு கருதி, காஸ் சிலிண்டர் பயன்படுத்த போலீசார் தடை விதிக்க முடிவு செய்துள்ளனர். இதனால், பிரசாதம், அன்னதானம் தயார் செய்வதில் சிக்கல் ஏற்படும்து. இக்கோயிலுக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் உள்ளதால், மத்திய உளவுத்துறை அறிவுரைப்படி, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாதந்தோறும் ஆய்வு செய்தும், அவ்வப்போது பிற இடங்களில் நடக்கும் அசம்பாவிதங்களை பொறுத்தும், பாதுகாப்பு அதிகரிக்கப்படும். ஏற்கனவே, கோயில் கடைகளில் எலக்ட்ரானிக் பொருட்கள், தீப்பெட்டி போன்ற பொருட்களுக்கு தடை உள்ளது. இந்நிலையில், இரு நாட்களுக்கு முன், பீகார் மாநிலம் புத்தகயாவில், குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதன்எதிரொலியாக, மீனாட்சி அம்மன் கோயிலுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இதன் ஒருபகுதியாக, கோயிலுக்குள் சிலிண்டர் பயன்படுத்த தடைவிதிக்க, போலீசார் முடிவு செய்துள்ளனர். முதற்கட்டமாக, கோயிலுக்கு வெளியே சித்திரை வீதிகளில் உள்ள கடைகள், ஓட்டல்களிலும் அதிக அளவில் சிலிண்டர்களை இருப்பு வைத்திருக்கக்கூடாது; தீ விபத்து ஏற்படாத வகையில் உணவு தயாரிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.
போலீசார் கூறியதாவது: மீனாட்சி கோயிலுக்குள் சிறு அசம்பாவிதம்கூட நடக்ககூடாது என்பதே எங்கள் நோக்கம். தற்போது, பிரசாதம், அன்னதானம் தயாரிக்க சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுகிறது. இதில் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகமவிதிப்படி, விறகுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆனால், அதை கடைபிடிப்பதில்லை. முடியாதபட்சத்தில், கோயிலுக்கு சொந்தமான இடங்கள் பல உள்ளன. அங்கிருந்து உணவை தயார் செய்து கோயிலுக்கு கொண்டு வரலாம். இதுகுறித்து, கோயில் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பதில் இல்லை, என்றனர். கோயில் நிர்வாக அதிகாரி ஜெயராமன் கூறுகையில், ""சிலிண்டர் பயன்படுத்த தடை விதிப்பது குறித்து எங்களுக்கு தகவல் இல்லை. தற்போது, தினமும் 3 சிலிண்டர்களை பயன்படுத்துகிறோம். பாதுகாப்புகருதி, இதர சிலிண்டர்களை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.