பதிவு செய்த நாள்
11
ஜூலை
2013
10:07
செய்யூர்: பெரிய கயப்பாக்கம் கோட்டை கற்பக விநாயகர் கோவிலில், கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. சித்தாமூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரிய கயப்பாக்கம் கிராமத்தில், பழமை வாய்ந்த கோட்டை கற்பக விநாயகர், வள்ளி, தெய்வானை உடனுறை முருகப்பெருமான் கோவில் உள்ளது. இக்கோவில், 20 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டது. இதில், சுவாமி அலங்கார மண்டபமும், அதில் விநாயகப் பெருமான், முருகப் பெருமானின் ஆறுபடை வீடு காட்சிகளும், மேல் மண்டபத்தில், முருகப் பெருமானின் திருமண காட்சியும், அம்மையப்பர் ரிஷப வாகன காட்சியும் வடிவமைக்கப்பட்டது. திருப்பணிகள் முடிந்து, நேற்று காலை, கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி, கடந்த 7ம் தேதி, விக்னேஷ்வர பூஜை மற்றும் பிரவேச பலியும், 8ம் தேதி, கணபதி ஹோமம் மற்றும் தனபூஜை, கோபுஜையும், 9ம் தேதி, இரண்டாம் கால பூஜை, அஷ்டபந்தனம் சாத்துதல் மற்றும் மூன்றாம் கால பூஜையும், 10ம் தேதி காலை 9:00 மணி முதல், 10:00 மணிக்குள், மகா கும்பாபிஷேகமும் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து, வழிபட்டனர்.