பதிவு செய்த நாள்
17
ஜூலை
2013
11:07
நாமக்கல்: சிங்களாந்தபுரம், வேட்டைக்காரன் ஸ்வாமி கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர்.நாமக்கல் அடுத்த, சிங்களாந்தபுரத்தில், வேட்டைக்காரன் ஸ்வாமி கோவில் உள்ளது. இங்கு மகா முனீஸ்வரர், கருப்பணார், சாம்புவான் ஆகிய தெய்வங்கள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இக்கோவில், திருப்பணி மிகுந்த பொருட்செலவில் மேற்கொள்ளப்பட்டது. திருப்பணிகள் அனைத்தும் முடிவடைந்ததை தொடர்ந்து, கும்பாபிஷேகம் செய்ய விழாக்குழுவினர் முடிவு செய்தனர். விழாவை முன்னிட்டு, கடந்த, 14ம் தேதி விநாயகர் பூஜையும் நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து, மகா கணபதி மற்றும் அஷ்டலட்சுமி யாகம், தீர்த்தக்குடம் ஊர்வலம், வாஸ்து பூஜை, அங்குரார்ப்பணம், பிரவேச பலியும் நடந்தது.நேற்று முன்தினம் அதிகாலை, 4 மணிக்கு, புண்யாகம், நாடி சந்தானம், இரண்டாம் காலயாக வேள்வி, கடம் புறப்பாடும் நடந்தது. அதையடுத்து, காலை 6.30 மணிக்கு, வேட்டைக்காரன் ஸ்வாமி, முனீஸ்வரர், சாம்புவான், கருப்பணார் ஆகிய தெய்வங்களுக்கு, மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. தொடர்ந்து மகா அபிஷேகம், ஸ்வாமி தரிசனம், மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும் நடந்தது. விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டுச் சென்றனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், விழாக்குழுவினர், ஊர் மக்கள் செய்தனர்.