பதிவு செய்த நாள்
18
ஜூலை
2013
10:07
புல்லரம்பாக்கம்: தீமிதி திருவிழாவை ஒட்டி, கிராமத்தில் உள்ள காவல் தெய்வங்களுக்கு பொங்கல் வைப்பதற்காக, பெண்கள் திரண்டு செல்கின்றனர். திருவள்ளூர் அடுத்த, புல்லரம்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ளது திரவுபதி அம்மன் கோவில். இக்கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் பிறந்தவுடன், தீமிதி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு, வரும் 21ம் தேதி, தீமிதி விழா நடைபெற உள்ளது. இக்கிராமத்தில் உள்ள காவல் தெய்வங்களான பொன்னியம்மன், செல்லியம்மன், படவேட்டம்மன் ஆகிய தெய்வங்களுக்கு, கிராம மக்கள் பொங்கல் வைத்து படையலிட்டு வணங்குவர். இதையொட்டி, இக்கிராமத்தில் உள்ள பெண்கள், ஒவ்வொரு கோவில்களிலும், சென்று அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபடுகின்றனர். இதனால் கிராமம் விழாக்கோலம் பூண்டுள்ளது. விழாவில், ஒவ்வொரு நாளும் அர்ச்சுனன் தபசு, திருக்கல்யாணம் என, நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடைபெறும். முக்கிய விழாவான, தீமிதி திருவிழா, வரும் 21ம் தேதி நடைபெற உள்ளது. இதில் புல்லரம்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி தீ மிதிப்பர்.