பதிவு செய்த நாள்
19
ஜூலை
2013
10:07
திருத்தணி: திருத்தணி மலைக் கோவிலுக்கு செல்லும் படிகளின் ஓரங்களில் நடைபாதை வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளதால், படிகள் வழியாக நடந்து செல்லும் பக்தர்கள் அவதிப்படுகின்றனர். திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு, தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். குறிப்பாக, ஆடி கிருத்திகை, திருப்படி திருவிழா, தமிழ் புத்தாண்டில் பால்குட அபிஷேகம், பிரம்மோற்சவம் மற்றும் மாதம்தோறும் வரும் கிருத்திகை ஆகிய நாட்களில் லட்சக்கணக்கானோர் முருகன் கோவிலுக்கு வந்து மூலவரை தரிசிக்கின்றனர்.
படிகள் ஆக்கிரமிப்பு: பெரும்பாலான பக்தர்கள் மலைக்கோவிலுக்கு, சரவணப்பொய்கையில் புனித நீராடிய பின், படிகள் வழியாக நடந்து செல்வர். மலைப்படிகளின் இருபுறமும் திருமண மண்டபம், விடுதிகள் கட்டி தங்கி வந்தனர். இதை சிலர் நாளடைவில் வாடகைக்கு விட்டும், சிலர் விடுதி, திருமண மண்டபங்களை ஆக்கிரமித்து கடைகள் வைத்து வியாபாரம் செய்ய துவங்கினர். தற்போது மலைப் படிகளின் இருபுறமும் தேங்காய், பழம், பொம்மை, பஞ்சாமிர்தம், பெட்டிக்கடை, பொரிக்கடை என, 150 கடைகள் உள்ளன. இவர்கள் முதலில் படிகள் அருகில் கடைகள் வைத்தவர்கள் தற்போது படிகளை ஆக்கிரமித்து வியாபாரம் செய்கின்றனர். சிலர் தங்கள் கடைகள் முன்பு இரண்டு கம்பிகளை பந்தல் போல் அமைத்து, படிகளில் பாதி அளவிற்கு ஆக்கிரமித்து வியாபாரம் செய்கின்றனர். இதனால், மலைக் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கடும் சிரமப்படுகின்றனர்.
கீற்று கொட்டகைகள்: சில கடைகள் எளிதில் தீப்பற்றக் கூடிய கீற்று கொட்டகையாக அமைந்துள்ளன. கூட்ட நேரங்களில், தீ விபத்து ஏற்பட்டால் பெரும் அசம்பாவிதம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தீ தடுப்பு கருவிகள் எதுவும் இங்கு இருப்பதில்லை. மேலும் படிகளில் பிச்சைக்காரர்கள் உட்கார்ந்து, நடந்து செல்லும் பக்தர்களை அழைத்து பணம் கேட்கின்றனர். மறுப்பவர்களை கிண்டல் செய்கின்றனர். படிகள் மற்றும் நடைபாதைகளில் ஆக்கிரமித்த கடைக்காரர்களை அகற்ற வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.இதுகுறித்து, கோவில் இணை ஆணையர் புகழேந்தி கூறுகையில், ""மலைப்படிகளில் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகள் இருந்தால் கண்டிப்பாக அகற்றப்படும் என்றார்.