வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு சேதுநாராயணப்பெருமாள் கோயில் பிரம்மோற்ஸவ விழாவை முன்னிட்டு சுவாமி, தேவியர் திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடந்தது. இவ்வைபவத்திற்காக ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டாள் அணிந்த மாலை, கிளி, வஸ்திரம் ஆகியவை கொண்டுவரப்பட்டது. அவற்றிற்கு டிரஸ்ட் செயலாளர் நாராயணன், தலைவர் ராஜகோபாலன் தலைமையில் பக்தர்கள் மேளதாளம் முழங்க வரவேற்பு கொடுத்து கோயிலுக்கு கொண்டு சென்றனர். சுவாமிக்கும், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதணைகளுடன் திருமஞ்சனம் நடந்தது. அதனை தொடர்ந்து சுவாமியும், தேவியர் இருவரும் ஒருவர் பின் ஒருவராக கோயில் மணப்பந்தலுக்கு அழைத்து வரப்பட்டனர். சுவாமிக்காக சீர்வரிசைகளை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து மணப்பந்தலுக்கு கொண்டுவந்தனர். அதன்பின் சுவாமி தேவியர் இருவருக்கும் மாலைகள் மாற்றி தாலி அணிவித்தார். பக்தர்கள் அட்சதை தூவி வணங்கினர். சென்னை டி.வி.எஸ். குழும அதிபர்கள் சரத்விஜயராகவன், பத்ரிவிஜயராகவன் முன்னிலையில் நலுங்கு வைபவம், சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் சுவாமி, தேவியர் கோயில் மையமண்டபத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டனர். ஏராளமான பெண்கள் திருமணத்தில் கலந்து கொண்டு மாங்கல்ய கயிறு மாற்றிக்கொண்டனர். பக்தர்களுக்கு திருமண விருந்து நடந்தது.