பதிவு செய்த நாள்
08
மார்
2011
03:03
சுந்தரகாண்டம் என்றால் என்ன? ஆஞ்சநேயர் கிஷ்கிந்தையில் இருந்து கிளம்பி, இலங்கை சென்று, சீதையைச் சந்தித்து, அசோகவனத்தை அழித்து, ராவணன் முன்னால் கால் மேல் கால் போட்டு அமர்ந்து பேசி, இலங்கையின் பெரும்பகுதியை எரித்து, ராமனிடம் சீதை உயிருடன் இருக்கிறாள் என்ற நல்ல செய்தி சொல்லி அவருக்கு உயிரூட்டினார் என்ற அளவிலான பகுதி என்பதை மட்டும் நாம் அறிந்து கொண்டால் போதாது. இந்த காண்டத்தைப் படித்தால், இறக்கும் நிலையில் உள்ளவர்களே பிழைத்துக் கொள்வார்களாமே, பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வார்களாமே, என்னவெல்லாமோ அதிசயங்கள் நிகழுமாமே என்று பிறர் சொல்லக் கேட்கிறோம். மேலோட்டமாக கடமைக்கு படித்தால், அந்தப் பயன்கள் நமக்கு கிடைக்குமா என்பது சந்தேகமே. சுந்தரகாண்டத்தை ஆழ்ந்து படிக்க வேண்டும். ஒவ்வொரு வரிக்கும் நமக்கு நாமே வியாக்கியானம் செய்து கொள்ள வேண்டும். சுந்தரகாண்டத்தை முழுமையாகப் படித்து, அதில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்ன என்று சிந்தனையைப் படரவிட்டால், குறைந்தபட்சம் ஒரு ஆண்டைத் தாண்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்தளவுக்கு அதில் வாழ்க்கைக்கு ஒளியூட்டும், நம்பிக்கையூட்டும் சம்பவங்கள் அடங்கிக் கிடக்கின்றன.ஆஞ்சநேயர் கிளம்பிவிட்டார். அப்போது, அவரது மனதில் ஒரு எண்ணம்.சுக்ரீவன் கொடுத்த வேலையைச் செய்தாயிற்று. சீதையைக் கண்டுபிடித்தாயிற்று. அடையாளத்துக்கு சூடாமணியை வாங்கியாயிற்று. இலங்கையைச் சுற்றிப்பார்த்து நகர அமைப்பைத் தெரிந்தாயிற்று. ஆனால், இந்த ராட்சஷப் பதர்கள் மிகுந்த சக்தி வாய்ந்தவர்கள் என்கிறார்களே. இவர்களது பலத்தை சோதித்து பார்க்க வேண்டுமே. எல்லாவற்றிற்கும் மேலாக ராவணனின் இருப்பிடத்தை பார்த்த நான், அவனது பராக்கிரமத்தை அறிந்து போக வேண்டுமே. சரி..அவனுடைய பராக்கிரமத்தை அறிய வேண்டுமானால், அவனுடன் இப்போதே போரிட்டாக வேண்டும். அவன் ஒன்றும் சாதாரணமாக வெளியே வருபவனல்ல. தன் கைத்தடிகளைத் தான் என் மீது ஏவுவான்.
அவர்கள் என்னுடன் போர் செய்வார்கள். போர் என்று வந்துவிட்டால் வெற்றி தோல்வி யாருக்கு என்பது உறுதியில்லை என்று பெரியவர்களெல்லாம் சொல்கிறார்கள். அது நிஜமும் கூட. ஒருவேளை அவர்கள் என்னை விட வீரமுள்ளவர்களாக இருந்தால் நான் தோற்றுப்போவேன். பின்னர், இங்கே சீதை இருக்கும் விஷயம் ராமனுக்கு தெரியாமலே போய்விடும். என்ன செய்யலாம்? என்று தீவிரமாக யோசித்தார்.முடிவில், போரில் வெற்றி தோல்வி என்பது சகஜம் தான். ஆனால், பலசாலிக்கு எப்போதுமே வெற்றி உறுதி என்பதும் போர் சாஸ்திரம் சொல்வது தானே! நான் ஒப்பற்ற வீரமுள்ளவன் என்று நம்புகிறேன். அதனால் எனக்கு தோல்வி என்பதே கிடையாது. எனவே, இந்த ராட்சஷர்களுடன் போரிடுவதில் தப்பே இல்லை என்று முடிவெடுத்தார். ஆஞ்சநேயர் இப்படி எண்ணியதை, ஆணவம் என்று எடுத்துக் கொள்ளக்கூடாது. அது நம்பிக்கை. ஒரே பாடத்தை பல மாணவர்கள் படிக்கிறார்கள். சிலர் அதைக் கடினமாகக் கருதி திண்டாடி குறைந்த மதிப்பெண் வாங்குகிறார்கள். வேறு சிலர் அதை எளிதாக எடுத்துக் கொண்டு நூற்றுக்கு நூறு வாங்கி பெற்றவர்களுக்கு பெருமை சேர்க்கிறார்கள். ஆஞ்சநேயர் இதில் இரண்டாவது ரகமாக இருந்தார். நான் நிச்சயம் ஜெயிப்பேன், மகாராஜா சுக்ரீவனுக்கு பெருமை சேர்ப்பேன் என்று நம்பினார். இப்போது புரிந்ததா? ஒருவன் முதலில் தன்னை நம்ப வேண்டும். தன்னை நம்புபவன் எதிலும் வெற்றிவாகை சூடுவான். எவ்வளவு பெரிய தத்துவத்தை சுந்தரகாண்டம் நமக்குச் சொல்கிறது பாருங்களேன்! இப்படி அணுஅணுவாக ஆய்வு செய்து சுந்தரகாண்டத்தைப் பாராயணம் செய்பவர்களே வெற்றி வாகை சூட முடியும். சரி.. வம்புக்குத்தான் போகக்கூடாது. ஆனால், வந்த சண்டையை எப்படி விடுவது? ராவணன் தான் இந்த சண்டைக்கு மூலகர்த்தா. அவன் இப்போது மாளிகையில் இருக்கிறான். அவனது கவனத்தை ஈர்ப்பது எப்படி? என்று சிந்தித்தார்.
தன் கண்முன்னால் பரந்து விரிந்து கிடந்த அசோகவனத்தைப் பார்த்தார். இதை அழித்து விட வேண்டும். இதை அழித்தால் சீதை இருக்குமிடத்தை யாரோ அழிப்பதாக ராவணனின் கவனத்துக்குச் செல்லும். அவனுடைய ஆட்களை அனுப்புவான். அவர்களைக் கொன்று குவிக்க வேண்டும். பின்னர் ராவணனே வருவான், என்று சிந்தித்தார். தன் எண்ணத்தை உடனடியாக செயல்படுத்தி விட்டார். குரங்கு கையில் அகப்பட்ட பூமாலை போல என்பார்களே...அதுபோல், அந்த அழகிய அசோகவனம் களையிழந்து போய்விட்டது. மரங்களைச் சாய்த்து, அங்கிருந்த தடாகக்கரைகளை நொறுக்கி அடையாளமே தெரியாமல் செய்துவிட்டார். சீதாதேவி அமர்ந்திருந்த சிம்சுபா மரத்தின் பக்கம் மட்டும் அவர் செல்லவில்லை. ராட்சஷிகள் இந்த சப்தம் கேட்டு எழுந்தனர். தாங்கள் இருப்பது அசோகவனத்தில் தானா அல்லது வேறு ஊரிலா என்ற சந்தேகம் வந்துவிட்டது. சீதை அமர்ந்திருந்த இடத்திற்கு வந்து, யார் இவன்? உனக்குத் தெரிந்தவனா? என்று கேட்டார்கள்.எனக்கு அவனை யாரென்றே தெரியாதே. இது ராட்சஷர்கள் வாழும் நாடு. யாரோ ஒரு சக்திவாய்ந்த ராட்சஷன் தான் இப்படி செய்திருக்கிறான் என்று நினைக்கிறேன். உங்களுக்கு தெரியாத விஷயமா? பாம்பின் பால் பாம்பறியுமே, என்று சொல்லிவிட்டாள்.ஒருவருக்கு நன்மை விளைகிறதென்றால் அப்போது பொய் பேசுவதில் தவறில்லை. சாட்சாத் மகாலட்சுமியே பூமிக்கு வந்து விட்டாலும், சில நன்மைகள் கருதி பொய் பேச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. ஒரு நல்லவனைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இப்படி அவள் சொல்லிவிட்டாள்.ராட்சஷிகள் ராவணனிடம் ஓடினார்கள்.மகாராஜா! நம் அசோகவனத்திற்குள் புகுந்த ஒரு குரங்கு வனத்தை பாழ்படுத்தி விட்டது. அது நீர் விரும்பும் சீதையிடம் பேசியதாக நாங்கள் அறிகிறோம். உமக்கு சொந்தமாக உள்ள ஒருத்தியிடம் பிறர் பேச நீர் அனுமதிக்கலாமா? அதை உடனே பிடித்து விசாரிக்க வேண்டும். அது ராமனால் அனுப்பப்பட்டதாக இருக்கும் என நம்புகிறோம், என்றனர். ராவணனின் கண்கள் சிவந்தன.