பதிவு செய்த நாள்
08
மார்
2011
03:03
பின்னர் அவனுக்கு ஆறுதல் வரும் வகையில் பேசினாள்.ஆஞ்சநேயா! உன் தேஜஸ், பராக்கிரமம் பற்றி நான் அறிவேன். உன்னோடு நான் வந்தேன் என்றால், நீ வேகமாக பறந்து செல்லும் போது, காற்றின் வேகத்தால் நான் கடலுக்குள் விழுந்து விடுவேன். அது மட்டுமல்ல! நீ என்னைக் கொண்டு சென்றதும், ராவணன் நிச்சயமாக ராட்சஷர்களை ஏவி விடுவான். அப்போது, நீ அவர்களுடன் போரிடுவாயா? உன்னைக் காப்பாற்ற முயற்சிப்பாயா? என்னைக் காப்பாற்ற முயற்சிப்பாயா? அந்த முயற்சியில் உன் உயிருக்கு ஆபத்து நேர்ந்து விடும். இந்த ராட்சஷர்களையெல்லாம் கூட ஒருவேளை நீ ஜெயித்தும் விடலாம். என்னையும் காப்பாற்றி விடலாம். ஆனால், ராவணனை எதிர்க்க தைரியமில்லாத ராமன், ஒரு குரங்கை அனுப்பி அவளை மீட்டு வரச் செய்தார் என்ற பழிச்சொல் என் பர்த்தாவுக்கு ஏற்படுமே! அது மட்டுமல்ல! என் கணவரைத் தவிர பிற யாரையும் தொடுவது சரியல்ல. ராவணன் உன்னைத் தொட்டு தூக்கி வரவில்லையா என நீ கேட்கலாம். பலமற்ற பெண்களை பலமுள்ள ஆண்கள் தூக்கிச் செல்லும், பெண்கள் தங்கள் பலம் கொண்ட மட்டும் தடுத்துப் பார்க்கலாம். முடியாத பட்சத்தில் என்ன செய்வது? அவர்களின் பிடிக்குள் மாட்டத்தான் வேண்டியிருக்கிறது. எனவே, அவனால் கடத்தப்பட்ட என்னை என் கணவர் வந்து மீட்டுச்செல்வதே சிறந்தது. அதற்கு ஏற்பாடு செய். அவர் லட்சுமணனுடன் இங்கு வந்துவிட்டால் அரக்க குலத்தை நிச்சயம் வேரறுத்து விடுவார். ராவணன் மாள்வான். இதில் சந்தேகமென்ன! என்று பெருமிதம் பொங்கச் சொன்னாள். ஆனாலும், அவளது கண்களில் கண்ணீர் வழிந்தது.தொடர்ந்து,மாருதி! இந்த உலகத்தில் தாய்மார்கள் தங்களைக் காப்பதற்காக ஆண் மக்களைப் பெறுகிறார்கள். ஆனால், என் மாமியார் அப்படிப்பட்டவள் அல்ல. அவள் ஸ்ரீராமனை உலக ÷க்ஷமம் கருதி பெற்றாள். அதனால் தான் அவர் ராஜ்யம் கிடைத்தும் ஆள மறுத்து வெளியேறினார். அவரை நான் எப்போதும் நினைத்துக் கொண்டுள்ளதாகவும், அவரை சாஷ்டாங்கமாக வணங்கியதாகவும் சொல். உலகத்தில் சிரமங்களை அனுபவிப்போர் அவரை சாஷ்டாங்கமாக பணிந்து சரணடைந்து விட்டால், அவர்களை அவர் காப்பாற்றியே தீருவார், என்றாள். அடுத்து தன் கொழுந்தன் லட்சுமணன் பற்றி பேச ஆரம்பித்தாள்.
அவன் வல்லவன், நல்லவன். என் கணவர் இட்ட கட்டளையை சற்றும் மறுக்காமல் செய்யக்கூடியவன். என் ஆசிர்வாதம் அவனுக்கு என்றும் உண்டு. ஆஞ்சநேயா! நான் குறிப்பிட்ட காலத்துக்குள் ராம லட்சுமணர் இங்கு வராவிட்டால், நான் பிழைத்திருக்க மாட்டேன் என்பதை உறுதியாகச் சொல்லி விடு, என்று சொல்லி, தனது புடவையில் முடிந்து வைத்திருந்த சூடாமணியை எடுத்துக் கொடுத்தாள்.அதைப் பெற்றுக் கொண்ட ஆஞ்சநேயர் அவளுக்கு மேலும் ஆறுதல் வார்த்தைகள் கூறி, ரகுநாதன் ராமனுடன் விரைவில் வருவேன் என்று உறுதியளித்தார். கிஷ்கிந்தைக்கு திரும்பிச் செல்ல அனுமதி கேட்டார். அவளுக்கோ அவருக்கு அனுமதியளிக்க மனம் வரவில்லை.ஆஞ்சநேயா! உனக்கு களைப்பாக இருந்தால் ஒன்றிரண்டு நாள் இங்கேயே தங்கிப் போயேன். நீ இங்கிருந்தால் எனக்கும் ஆறுதலாக இருக்கும். நீ வரும் முன்பு மிகுந்த சோகத்தில் இருந்தேன். உன்னைப் பார்த்ததும் என் துக்கத்தை மறந்து விட்டேன். நீ போய் விட்டால், முன்பை விட என்னைத் துக்கம் வாட்டுமே! சரி போகட்டும்! ஒரு சந்தேகம்! இந்தக் கடலைத் தாண்ட வாயுவும், நீயும், கருடனும் மட்டுமே தகுதியுள்ளவர்கள். என் நாதனும், லட்சுமணனும் எப்படி இங்கு வருவார்கள்? ஆனால், உன் திறமை மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. உன்னால் எதையும் சாதிக்க முடியும். அவர்களை இங்கே கூட்டி வர வேண்டியது உன் பொறுப்பு, என்றாள். உடனே தன்னடக்கத்துடன் ஆஞ்சநேயர் என்ன சொன்னார் தெரியுமா? அதைப் படிப்பதற்கு முன் உங்களுடைய அலுவலகம், வீடு ஆகியவற்றை மனக்கண் முன் கொண்டு வாருங்கள். சிலர் அலுவலகங்களில், தங்களால் மட்டுமே எல்லாம் நடக்கிறது என பெருமையடித்துக் கொள்வார்கள். அனைத்தும் அறிந்த மேதாவி களாகக் காட்டிக் கொள்வார்கள். மற்றவர்களை மட்டம் தட்டுவதில் சிலருக்கு அலாதி இன்பம்.
வீட்டை எடுத்துக் கொண்டால் ஒரு குடும்பத்தலைவர், தன் சம்பாத்தியம் இல்லாவிட்டால் குடும்பமே நடுத்தெருவுக்கு வந்துவிடும் என பெருமையடித்துக் கொள்வார். ஆனால், எந்த சாதனையையும் படைக்கத் தகுதியுள்ள ஆஞ்சநேயர் என்ன சொன்னார் தெரியுமா? அம்மா! எங்கள் தலைவர் சுக்ரீவன் அளவற்ற பராக்கிரமம் கொண்டவர். அவரைச் சார்ந்துள்ள வீரர்கள் எல்லோருமே என்னை மிஞ்சிய பலசாலிகள். எனக்கு குறைந்தவர்கள் அங்கு யாருமில்லை. அதனால், அங்கிருந்து இங்கே வந்து சேர்வதில் எந்த தடையும் இராது. இதில் சந்தேகமே தங்களுக்கு வேண்டாம். நிச்சயம் ராமன் எங்களுடன் வருவார். ராவணனைக் கொல்வார். நாங்கள் இலங்கை சமுத்திரத்தை தாண்டுவோம். நீங்கள் துக்க சமுத்திரத்தை தாண்டுவீர்கள், என்றார்.சீதா மிகவும் சந்தோஷப்பட்டாள்.ஆஞ்சநேயனே! பயிர் பாதி விளைந்து பலனைக் கொடுக்கும் சமயத்தில், மழையில்லாமல் போனால் பயிர் வாடும். அப்போது தெய்வ அனுக்கிரஹத்தால் மழை பெய்தால் பயிர் எப்படி தழைக்குமோ அந்த நிலைமையில் நான் இருக்கிறேன். நான் ராமபிரானுடன் சுகவாழ்வு நடத்தினேன். பின்னர் அவரைப்பிரிந்து உயிரை விட இருந்த சமயத்தில் நீ வந்து காப்பாற்றினாய். இப்போது என்னிடம் இருப்பது என் நாதன் எனக்களித்த சூடாமணி மட்டும் தான். அதைப் பார்க்கும் போதெல்லாம் அவர் முகம் அதில் தெரியும். இப்போது, அதையும், என்னை நீ பார்த்த அடையாளத்திற்காக கொடுத்து விட்டேன். இப்போது என்னிடம் எதுவுமே இல்லை. என் ராமன் இங்கு வரும் நாள் மட்டுமே எனக்கு நம்பிக்கையூட்டும் நாள், என்று சொல்லி அழுதாள்.மாருதி அவளை மீண்டும் தேற்றி புறப்படத் தயாரானார். அவரது முகத்தில் வெற்றியைக் குறிக்கும் விதத்தில் ஜெயலட்சுமி குடி கொண்டாள்.