பதிவு செய்த நாள்
08
மார்
2011
03:03
யாரடா அங்கே! உடனே செல்லுங்கள், அந்த வானரனைக் கொல்லுங்கள், என்று கட்டளை பிறந்தது ராவணனுடைய வாயில் இருந்து!பலத்தில் ராவணனுக்கு இணையான எண்பதாயிரம் அசுர வீரர்கள் பெரிய ஆயுதங்களுடன் புறப்பட்டார்கள். மாருதி அமர்ந்த இடத்தைக் கண்டுபிடித்து அவரைச் சுற்றி வளைத்தார்கள். அவரை அடித்தார்கள். கத்திகளை வீசினார்கள். இதுவரை ஆஞ்சநேயர் என்ற சொல் இந்த தொடரில் பயன்படுத்தப்பட்டது. இப்போது மாருதி என்று மாறக் காரணம் ஏதும் உண்டா? என நீங்கள் யோசிக்கலாம்.மாருதி என்ற சொல், மாருதம் என்ற சொல்லில் இருந்து உருவானது. மாருதம் என்றால் காற்று. காற்றின் மைந்தனல்லவா ஆஞ்சநேயர். அதனால் அவரை மாருதி என்பர். காற்றடைக்கப்பட்ட பந்தை நீருக்குள் அமிழ்த்தினால் என்னாகும்? அது மேலே மேலே தான் வரும். அதுபோல், இங்கே மாருதிக்கு அசுரர்கள் கோபத்தை ஊட்ட ஊட்ட சிறு குரங்காக இருந்த அவர் உயர்ந்தார்...உயர்ந்தார்...உயர்ந்து கொண்டே இருந்தார். விஸ்வரூபம் தரித்தார்.எவ்வளவோ பூஜை, புனஸ்காரங்களைச் செய்யும் நாம் மாருதியின் தரிசனம் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கிறோம். பார்த்தீர்களா! குடிகெடுக்கும் ராட்சஷர்கள் கண்களுக்கு அவர் தெரிகிறார். அதிலும் விஸ்வரூப தரிசனம் காட்டுகிறார். ஏன் தெரியுமா? அவர்களுடைய தலைவன் கெட்டவனே ஆயினும் சிவபக்தன். அந்த சிவனே ராமனுக்கு சேவை செய்ய வானரமாய் அவதரித்துள்ளார். ஒருவன் செய்த பிரார்த்தனையால், அவனது நாட்டிலுள்ள எல்லோருக்கும் இறை தரிசனம் கிடைக்கிறது. ஒருவேளை கலியுகத்தில் இருப்பதால், நம் பிரார்த்தனைக்கு அவர் செவி கொடுக்க மறுக்கிறாரோ என்னவோ?அவர்கள் வீசிய ஆயுதங்களை நொறுக்கித் தள்ளினார். இலங்கையே நடுங்கும்படி சிங்கம் போல் கர்ஜித்தார். அந்த ஓசை கேட்டு பறவைகள் எல்லாம் மயங்கி தரையில் விழுந்து விட்டன.
அடேய் ராட்சஷப் பதர்களே! ராமன், அவர் தம்பி லட்சுமணன், என் மகாராஜா சுக்ரீவன் ஆகியோருக்கு நிகரான பலசாலிகள் இவ்வுலகில் இல்லை. நான் ராமதூதன். அவரது பக்தன். வாயுவின் புத்திரன். எதிரிகளுக்கு எமன். நீங்கள் என் காலுக்கு தூசு. உங்கள் அரசன் ராவணனைப் போல் ஆயிரம் அசுரர்கள் வந்தாலும் அவர்களைப் பந்தாடி விடுவேன். சீதையைக் கண்டேன். அவளிடம் பேச வேண்டியதைப் பேசி விட்டேன். இனி, உங்களையெல்லாம் கொன்று இலங்கையை சர்வநாசமாக்கி விட்டு, சுகமாக என் இருப்பிடம் திரும்புவேன், என சவால் விட்டார். நம் ஊரில் ஜெயிப்பது முக்கியமல்ல. பக்கத்து ஊரில் போய் ஜெயிக்க வேண்டும். அப்படி செய்யாமல், நம்மை நம்பர் ஒன்று என சொல்லிக் கொள்வது எப்படி முட்டாள்தனமோ, அது போல் இல்லாமல், மாருதி பக்கத்து நாட்டில் போய் சவால் விட்டார்.ராட்சஷர்கள் அந்தக் குரல் கேட்டே நடுங்கி விட்டார்கள். மாருதியின் பார்வையில் ஒரு இரும்பு உலக்கை பட்டது. அதை உருவி எடுத்தார். களத்தின் நடுவில் அவர் நிற்க சுற்றிலும் ராட்சஷர்கள் நின்றார்கள். அவர்களை எல்லாம் அந்த உலக்கையை சுழற்றி நாசம் செய்தார். சிலருக்கு பயம் வந்து விட்டது. அவர்கள் ராவணனிடம் ஓடினார்கள்.நாங்கள் மட்டும் தான் மிச்சம். மற்றவர்களை அந்தக் குரங்கு நாசம் செய்து விட்டது. விண்முட்ட உயர்ந்து நின்ற குரங்கிடம் இருந்து தப்பி வந்ததே பெரிய காரியம் என்றார்கள்.ராவணன், தன் முதலமைச்சர் பிரஹஸ்தனுடைய புத்திரன் ஜம்புமாலியை அழைத்து, நீ போய் அந்த குரங்கைக் கொன்று வா, என்றான். இதற்குள் மாருதி, அசுரர்களைக் கொன்றால் போதுமா? அசோகவனம் அழிந்தால் போதுமா? அதோ! அங்கே தெரியும் ராவணனின் அரண்மனை மாடத்தை இடித்து தள்ள வேண்டும், என முடிவு செய்தார். அந்த உப்பரிகை நவரத்தினங்களால் ஜொலித்தது.
மாருதி அதன் எதிரே ஒளி பொங்க நின்றார். அதைக் காவல் காத்த அசுரர்களை நோக்கி, அடேய்! இந்த அரண்மனையை அழிக்க வந்திருக்கிறேன். முடிந்தால் தடுத்துக் கொள்ளுங்கள், என சவால்விட்டார். அசுர காவலர்கள் மாருதியை நோக்கி ஆவேசத்துடன் ஓடி வந்தார்கள்.அந்த பலவான்களில் பலர் ஓகம் எனப்படும் பலமுடையவர்கள். நூறு யானை பலம், ஆயிரம் யானை பலம் என்பது போல ஓகம் என்பது இதையெல்லாம் விட அதிக எண்ணிக்கையுள்ள யானைகளின் பலமுடையவர்கள். அவர்களை எதிர்கொள்ள மாருதி தயாரான போது, ஜம்புமாலி கோவேறு கழுதைகள் பூட்டிய தனது ரதத்தில் வந்து சேர்ந்தான். அவனது கோரைப் பற்களைப் பார்த்தாலே மயக்கம் வந்து விடும். அவ்வளவு பெரியது. அந்த பற்களைக் காட்டியபடி கடும் கோபத்துடன் இருந்தான்.வீரர்கள் உடனே யாரையும் கொல்லமாட்டார்கள். தன் சக வீரனோடு சண்டை போடுவதில் அவர்களுக்கு அலாதி இன்பம். பலவானான ஜம்புமாலியுடன் யுத்தம் செய்ய மாருதிக்கு ஆசை வந்து விட்டது. அதற்கேற்றாற் போல், ஜம்புமாலி தன் பாணங்களை மாருதி மேல் தொடுத்தான். மாருதி ஒரு பெரிய பாறையைப் பிடுங்கி அவன் மேல் எறிந்தார். அவன் அதை தன் அம்புகளால் தகர்த்து விட்டான். பார்த்தார் மாருதி. ஒரு பெரிய ஆச்சா மரத்தைப் பிடுங்கி வீசினார். அதையும் அவன் தடுத்து விட்டான். பின்னர் ஒரு மிகப்பெரிய இரும்பு உலக்கையை எடுத்து அவன் மீது வீசினார். அவ்வளவு தான்! ஜம்புமாலியைக் காணவில்லை. அவன் தலை ஓரிடத்தில் சிதைந்து கிடக்க, கை, கால்கள் கழன்று கிடக்க மண்ணோடு மண்ணாகி விட்டான்.இதைக் கேள்விப்பட்ட ராவணன், கோபத்தில் மீசை துடிக்க, தன் மந்திரி பிரதானிகளின் குமாரர்கள் அனைவரையும் அனுப்பி, அந்தக் குரங்கைப் பிடித்து வாருங்கள், என ஆணை பிறப்பித்தான். மின்னலென வந்த அவர்களும் மாருதியின் ஆவேசத்துக்கு பலியானார்கள்.ராவணனுக்கு பயம் வந்து விட்டது.