பதிவு செய்த நாள்
25
ஜூலை
2013
03:07
கவுரி வல்லப ராஜன். இவர்தான் அக்காலத்தில் சிவகங்கை சமஸ்தானத்தின் அதிபதி. மிகுந்த தமிழ்ப் பிரியர். இசை ஆர்வம் மிக்கவர். தமது அரசவைக்கு வரும் புலவர்களையும், சங்கீத வித்வான்களையும் ஆதரிப்பவர். அவர்களது புலமையைக் கேட்டு இன்புற்றுப் பாராட்டி, பல பரிசுகளை வழங்கி கவுரவிப்பார். ஒருநாள், கவியாற்றில் மிக்க இசைக்கலைச் செல்வர் ஒருவரைப் பற்றி அவரது அவைப் புலவர்கள் புகழ்ந்தனர். அரசர் அந்தப் புலவரை அரசவைக்கு வரவழைத்து, அவர் இயற்றிய கவிதைகளைக் கேட்டு மிகவும் இன்புற்றார். கவிகளில் உள்ள பொருள் நயம், சொல் நயம், இனிய குரல் வளம், முக மலர்ச்சி, பக்திச்சுவை ஆகிய அனைத்தையும் கண்டு வியந்தார். அந்த புலவரின் இசைப்புலமையையும், கவியாற்றலையும் பாராட்டி தக்க மரியாதை செய்து கவிகுஞ்சரம்(குஞ்சரம்-யானை) என்று பட்டமளித்துப் பாராட்டினார். அத்துடன் தமது சமஸ்தானத்தில் உள்ள புலவர்களுடன் அவரும் உடனிருந்து அவையை அலங்கரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அரசரின் வேண்டுகோளுக்கிணங்கி தமது ஊரிலிருந்து வந்து சிவகங்கையில் குடியேறினார் கவிகுஞ்சரம்.
அந்த அரசருக்குப் பின் பட்டத்துக்கு வந்த சத்ரபதி போதகுரு மகாராஜா காலத்திலும் இவர் மிக்க மரியாதையுடன் ஆதரிக்கப்பட்டார். அரசன் ஒருமுறை வேட்டைக்குச் சென்றபோது, 16 அடி வேங்கை ஒன்றை குத்திக் கொன்றார். அந்தத் தீரச் செயலைப் புகழ்ந்து வேங்கைக்கும்மி என்னும் பிரபந்தத்தை பாடினார் கவிகுஞ்சரம். அந்த பாடலின் இனிமையை ரசித்த அரசர். கொட்டக்கச்சி குயந்தல் என்ற கிராமத்தை கவி குஞ்சரத்துக்கு சாசனம் செய்து கொடுத்து சிறப்பித்தார். யார் இந்த கவிக்குஞ்சரம்?
அன்றைய ராமநாதபுரம் ஜில்லா. சிவகங்கை சமஸ்தானத்தில், பெருங்கரை என்ற ஊரில் சுப்ரமண்ய பாரதி என்பவர் வாழ்ந்தார். அவர் தமிழ், சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளிலும் வேத சாஸ்திரங்களிலும் மிக்க புலமை பெற்றவர். அவருக்குத் திருமணமாகி பல ஆண்டுகள் பிள்ளையில்லாக் குறை இருந்து வந்தது. பெருங்கரைக்கு அருகில் உள்ள கொடுமளூரில் குமரகுரு சுப்ரமணிய சுவாமி கோயிலுக்குத் தம் மனைவியுடன் சென்று விரதம் இருந்தார். குமரன் திருவருளால் ஓராண்டு கழித்து 1810 ல் அழகான புதல்வன் பிறந்தான். குழந்தைக்குத் தமது தாத்தாவின் பெயரான கோடீஸ்வரன் என்னும் பெயரையே இட்டார். இளமையிலேயே தகப்பனாரைப் போல் வடமொழி, தென் தமிழில் இலக்கண-இலக்கியங்களைக் கற்றார் கோடீஸ்வரன். பரம்பரைச் சொத்தான கவிபாடும் திறமை தானாகவே வந்தது. மதுரையில், புகழ்பெற்ற மதுரகவிபாரதி என்ற இசைப் பேரறிஞரிடம் இசையை நன்கு பயின்றார். 12 ஆம் வயதிலேயே கவிபாடும் ஞானத்தைப் பெற்றார். தெய்வ பக்தியில் சிறந்த இவர், தமது குல தெய்வமாம் கந்தப்பெருமான் மீதும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் மீதும் பல கீர்த்தனைகளையும் பதங்களையும் இயற்றினார். 18-வது வயதில் இவருக்குக் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. அதனால் உடல் மெலிந்து மிகவும் வருந்தினார். தன் மீது ஒரு பிரபந்தம் பாடுமாறு தர்மசாஸ்தா இவரது கனவில் தோனறி கூறினாராம். அடுத்த இரண்டு நாட்களில் அந்த ஐயனார் மீது பள்ளு என்னும் பிரபந்தம் ஒன்று பாடி, அதனை அக்கோயிலில் அரங்கேற்றம் செய்தார். நோயும் குணமாயிற்று.
இப்படிப்பட்ட புலமையும் இசை ஞானமும் கொண்ட கவிஞரே மேற்படி சிவகங்கை சமஸ்தானத்தில் அரசரால் கவிகுஞ்சரம் என்று பட்டமளிக்கப்பட்டு, பாராட்டுப் பெற்றவர். குலப்பெயரில் உள்ள பாரதியும் இணைந்து கவிகுஞ்சர பாரதி என்றழைக்கப்பட்டார். ராமநாதபுரம் சமஸ்தான அரசர் முத்துராமலிங்க சேதுபதி அவர்கள் இவரது புலமையையும் இசை ஞானத்தையும் கேள்வியுற்று தமது அவைக்கு அழைத்து கவரவித்தார். அத்துடன் தமது சமஸ்தானத்தில் வித்வானாகவும் நியமித்தார். இப்படி இரண்டு சமஸ்தானங்களிலும் புலவராய்த் திகழும் கவுரவம் கிடைத்தது. சேதுபதி அவர்களின் மூத்த சகோதரர் பொன்னுசாமித் தேவர் என்பவர் மிகப் பெரிய தமிழ்அறிஞராக விளங்கியவர். அந்தக் காலத்தில் தகுந்த புலவர்களைக் கொண்டு பழைய தமிழ் நூல்களைப் பரிசோதித்து, அச்சில் புதிப்பித்து தமிழ்த் தொண்டு செய்தவர். கவிகுஞ்சரபாரதியின் புலமையையும் கவித்துவத்தையும் இசை ஞானத்தையும் நன்கு உணர்ந்த தேவர் அவர்களுக்கு இவரது திறமையைக் கொண்டு அற்புதமான நூல் ஒன்றை இயற்றுவிக்க வேண்டும் என்ற பேரவா உண்டாயிற்று.
கவிச்சக்கரவர்த்தி கம்பர் ராமாயணக் காப்பியத்தை பதினாயிரம் பாடல்களில் செய்தார். அதனை இருநூற்றைம்பது கீர்த்தனங்களிலும், இருநூற்றைம்பது விருத்தங்களிலும் அடக்கி ராமநாடகக் கீர்த்தனை எனும் இசை நாடக நூலை அருணாசலக் கவிராயர் என்னும் புலவர் அக்காலத்தில் இயற்றினார். இந்நூல் பலராலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அதைப் போல முருகனின் பெருமையைக் கூறும் பிரபந்தம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதே தேவரின் விருப்பம். கச்சியப்ப சிவாச்சார்யர் இயற்றிய கந்த புராணம் 10, 345 பாடல்களை உடையது. அதை ஓர் இசை நாடக நூலாக அமைக்க கவிகுஞ்சர பாரதியைக் கேட்டுக் கொண்டார் பொன்னுசாமித் தேவர் அதனை இயற்றுவதற்கு உதவியாக சம்பந்த சரணாலயா இயற்றிய, கந்தபுராணச் சுருக்கம் என்ற நூலையும் அளித்தார். அப்போது கவிகுஞ்சர பாரதியின் வயது 55. தமது வாழ்நாளில் முருகப்பெருமான் திருவருளை சிந்திப்பதற்கு மிகச் சிறந்த வாய்ப்பு இது என்பதுடன் முருகனின் பேரருளே இப்படி தேவரின் வாய்மொழியாக வந்தது என்று மகிழ்ந்து இதற்குச் சம்மதித்தார். ஆரவாரமான அரச சபையிலிருந்து இப்பணியைச் செய்வது கடினம் என்று கருதி. அமைதியான இடத்தில் தனித்திருந்து இந்த இசைத் தமிழ்ப் பணியைச் செம்மையாக நிறைவேற்ற, தமது ஊராகிய பெருங்கரையை அடைந்தார். கந்தன் அருளை வேண்டி நூலைப் பாடத் தொடங்கினார்.
பொன்பூத்த கஞ்சப் புனல் தடங்க ரைக்குடபால்
மின் பூத்த சித்திமத வேழமே அன்பூற்றும்
கந்தர்கதை கீர்த்தனமாகக் கட்டுரைக்க இட்டமதாய்
வந்துதலி செய்வாய் மகிழ்ந்து
எனும் ஸித்தி விநாயகர் துதியுடன் ஆரம்பித்து. ஐந்தாண்டுகளில் ஸ்காந்த புராணக் கீர்த்தனை நூலை நிறைவு செய்தார். அப்போது அவரது வயது 60, 240 கீர்த்தனைகளும், 300 விருத்தங்களும் கொண்டு சுருக்கமாகவும், அதே நேரம் கதாபாத்திரத்தைச் சிறிதும் விடாமலும் இந்நூலைப் பாடியுள்ளது மிகவும் அற்புதமாகும். 1914-ஆம் ஆண்டு அச்சிடப்பெற்ற இந்த இசை நூல் மீண்டும் அச்சாகவில்லை முருகனடியார்களும் சங்கீத வித்வான்களும் இசை அபிமானிகளும் இதனை மீண்டும் இதனை அச்சிட்டு உதவினால் இசைத்தமிழுக்குப் பெரிதும் பயனுடையதாய் இருக்கும். அனைவரது பார்வைக்கு வரும். மதுரையை அடுத்த அழகர்கோயில் திருமால் மீது அழகர் குறவஞ்சி எனும் சிறந்த நூலை இயற்றி அரங்கேற்றி, பாராட்டு பெற்றார். இந்நூல் பக்தி, சிருங்காரம் ஆகிய சுவையுடன் சொல், பொருள், இசை முதலிய நயங்களால் கேட்போர் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் மதுரை மீனாட்சி மீது அடைக்கலமாலை, திருமுகவிலாசம், வள்ளிகுஞ்சரி மணாளன் பதிகம், தேவையம் பதி முருகன் பதிகம் மற்றும் பல கீர்த்தனங்களும் பதிகங்களும் இயற்றியுள்ளார்.
ஸ்காந்த புராண கீர்த்தனை நூலைப் பாடி முடித்ததும், அதனை அரங்கேற்றம் செய்ய மீண்டும் அரசவைக்குச் செல்லாமல், மன நிறைவுடன் தமது ஊரிலேயே தங்கி முருக வழிபாட்டுடன் நித்ய பூஜை, பஜனை முதலான சிந்தனைகளில் ஈடுபட்டு சுகமாக வாழ்நாட்களைக் கழித்து வந்தார் கவிகுஞ்சர பாரதியார். இறைவன் தொண்டே பெரிய பாராட்டும் கவுரவமும் ஆகும் என வாழ்ந்த கவிகுஞ்சரபாரதி அருள்வாக்கு பெற்றவர். ஒருமுறை, இவரது ஊரில் மழை பெய்யாமல் பயிர்களும் மக்களும் வாடியபோது, கந்தன் மீது பாடல் பாடி மழை பொழியச் செய்தார். அதேபோல இவர் வீட்டில் நன்கு பால் கறந்து வந்த மாடு ஒன்று நோய் கண்டு வருந்துகையில், வேலன் மீது ஒரு வெண்பா பாடியவுடன் நோய் நீங்கி மாடு பிழைத்ததாம். இவர் காலத்தில், கவி காளமேகம் எனப் புகழ்பெற்ற வேம்பத்தூர் பிச்சுவையர் அவர்கள் ஒருமுறை இவரிடம் விபூதி வாங்கி நெற்றியில் அணிந்து கொண்டாராம்.
நெற்றிதனில் அணிந்தேன் நீங்கினேன் கர்மவினை
ஏற்றி விட்டேன் இன்பநிலை எய்தினேன் முற்றுணர்ந்து
கந்தனருள் பெற்ற கவிகுஞ் சரமறையோன்
தந்த விபூதிதனை
என ஒரு வெண்பாப் பாடி தாம் பெற்ற இறை உணர்வை போற்றியுள்ளார் கவி காளமேகம் வேம்பத்தூர் பிச்சுவையார். ஆயிரம் பிறை கண்டு கந்தனருளால் வையத்து வாழ்வாங்கு வாழ்ந்த கவிகுஞ்சர பாரதி 1896-ஆம் ஆண்டு தமது 86வது வயதில் முருகன் திருவடிகளில் கலந்தார். அவருடைய மகள் வழிப் பெயரே கர்னாடக சங்கீதத்தில் 72 மேளகர்த்தா ராகங்களில், கந்த கானாமுதம் எனும் அற்புதமான இசைத்தமிழ்ப் பாடல் நூலைப் படைத்த கோடீஸ்வர ஐயர் எனும் சங்கீத வித்வான் ஆவார்.