பதிவு செய்த நாள்
25
ஜூலை
2013
03:07
கோராகும்பர் என்னும் கோராபா, தேராடோகி என்னும் கிராமத்தில் குயவர் குலத்தில் கி.பி 1267-ல் பிறந்தார். இளமைப் பருவத்திலிருந்தே சிறந்த விட்டல் பக்தராகத் திகழ்ந்தார், பானைகளைச் செய்யும் தன்னுடைய அன்றாட வேலைகளைச் செய்து கொண்டே பாண்டுரங்கனின் நாமத்தை இடைவிடாது உச்சரிப்பது இவரது வழிபாட்டின் சிறப்பம்சம். ஒருநாள் மண்பாண்டங்களைச் செய்ய களி மண்ணைக் காலால் மிதித்துக்கொண்டே பக்திப் பரவசத்துடன் மெய்மறந்து பாண்டுரங்கன் நாமத்தை உச்சரித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் மனைவி அவரிடம் தான் வெளியே செல்வதால் பச்சிளங்குழந்தையைப் பார்த்துக் கொள்ளும்படி கூறிச் சென்றாள். பாண்டுரங்கனிடம் மனதைப் பறி கொடுத்தவருக்கு இது காதில் விழவில்லை. தன்னை மறந்து மண்ணை இவர் மிதிக்க, குழந்தை மெல்ல மெல்லத் தவழ்ந்து மண்ணில் இறங்க, இவர் கண் மூடிய பக்திநிலையில் மண்ணோடு மண்ணாக அந்த பாலகனையும் சேர்த்து மிதிக்க, குழந்தை இறந்துவிடுகிறது.
வீடு திரும்பிய கோராபாவின் மனைவி, குழந்தைக்கு நேர்ந்த கதியைக்கண்டு கதறித் துடிக்கிறாள். அவரைக் கண்டபடி ஏசுகிறாள். மனம் புண்படும்படி வார்த்தைச் சரம் தொடுக்கிறாள். பாவம், அவள் மீதும் குற்றமில்லை. பெற்ற பிள்ளையைப் பறிகொடுத்த துயரம்! கோராபாவுக்கோ பாண்டுரங்கன் நாம உச்சாடம் பாதியிலே தடைப்பட்ட கோபம். இறைபக்திக்கு இடையூறு விளைவித்த இல்லத்தரசியை அடிப்பதற்காக மட்பாண்டம் செய்யும் சக்கரத்தைக் கையில் ஏந்தி ஓடிவந்தார். அப்போது அவர் மனைவி சந்தி. பாண்டுரங்கன் மீது ஆணையிட்டு தன்னைத் தீண்டக் கூடாது என்று கூறினாள். பகவான் விட்டல் மீது சத்தியம் செய்து கூறியதை மீறாமல், அன்றிலிருந்து கோராபா மனைவியை விட்டு விலகி வாழ்ந்தார்.
வம்ச விருத்திக்காக சந்தியின் தங்கை இராமியை மணந்தார் கோராபா. அங்கும் விதி விளையாடியது. தனது இரு மகள்களையும் சமமாக, ஒரே மாதிரி நடத்தும்படி கோராபாவின் மாமனார் கேட்டுக் கொண்டார். அதனால் இராமியை விட்டும் கோராபா விலகியே இருந்தார். இதனால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளான மனைவியர் இருவரும் ஒருநாள் இரவு தங்கள் கணவனின் அருகில் சென்று அவர் உறங்கும்போது அவரது கைகளைப் பிடித்துக் கொண்டனர். விழித்துக் கொண்டார் கோராபா. புலனடக்கத்திற் சிறந்தவர் கோராபா என்பதை உலகுக்குப் பறைசாற்ற பாண்டுரங்கன் எண்ணம் கொண்டான். மனைவியர் இருவர் கரம்பட்டு விழிப்புற்ற கோராபா நடந்ததை அறிந்து துணுக்குற்றார். தனது விரதத்துக்கு பங்கம் வந்ததை எண்ணி வருந்தி, தனது கரங்களைத் தானே வெட்டிக் கொண்டார். மனைவியர் இருவரும் அழுது அரற்றினர். தங்களது விவேகமில்லாத செயலுக்காக மனம் வருந்தினர்.
ஒரு ஆடி மாத ஏகாதசியில், பாண்டுரங்கனைக் காண மனைவியாருடன் பண்டரிபுரம் சென்றார் கோராபா, விட்டலனை கண்குளிர சேவித்தார். எப்போதும் போல் வாய், விட்டலனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டிருந்தது. பக்திப் பரவசத்தில் மூழ்கியிருந்தார் கோராபா, விட்டல, விட்டல, பாண்டுரங்கா என்று சொல்லிக்கொண்டேகுதித்து மெய்மறந்தவர், ஒரு கட்டத்தில் இரு கைகளாலும் தாளம் போட்டுக் கொண்டிருந்தார். ஆம்! இழந்த கைகளை பாண்டுரங்கன் அவருக்கு மீண்டும் வழங்கியதோடு, இழந்த மகனையும் உயிர்ப்பித்து அவரது பக்தியின் பெருமையை உலகறியச் செய்தான். மகனோடும், மனைவியரோடும் நீண்ட காலம் மகிழ்ச்சியாய் வாழ்ந்து முக்தி பெற்றார் கோராபா என்ற கோராகும்பர்.