பதிவு செய்த நாள்
27
ஜூலை
2013
10:07
புவனேஸ்வர்: ""புரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரையின் போது, ரதத்தின் மீது ஏறுவதற்கு, அடுத்த ஆண்டு முதல், வெளிநாட்டினருக்கு தடை விதிக்கப்படும், என, கோவில் தலைமை அர்ச்சகர், மகாபத்ரா தெரிவித்துள்ளார் . ஒடிசா மாநிலத்தில், பிரசித்தி பெற்ற, புரி ஜெகநாதர் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டு தோறும் நடக்கும் ரத யாத்திரையில், உள்நாடு மற்றும் வெளி நாடுகளில் இருந்து, ஏராளமான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். இந்தாண்டுக்கான ரத யாத்திரை, சமீபத்தில் நடந்தது. இந்த யாத்திரையின்போது, இத்தாலியை சேர்ந்த நடன கலைஞர், இலியானா சிடாரிஸ்ட் என்பவர், ரதத்தின் மீது ஏறி, சுவாமியை தரிசிக்க முயன்றார். அப்போது, ரதத்தில் இருந்தவர்கள், 1,000 ரூபாய் லஞ்சம் கேட்டதாகவும், அதை தர மறுத்ததால், அவரை தாக்கியதாகவும், பரபரப்பு புகாரை தெரிவித்தார். இது தொடர்பாக, ஒடிசா போலீசார், வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், புரி ஜெகநாதர் கோவிலின் தலைமை அர்ச்சகர், ஸ்வைன் தாஸ் மகாபத்ரா கூறியதாவது: இந்தாண்டுக்கான ரத யாத்திரை, அசம்பாவிதம் எதுவுமின்றி, அமைதியாக நடந்து முடிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனாலும், ரதத்தின் மீது ஏற முயற்சித்த, வெளிநாட்டு பெண் தாக்கப்பட்டதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், அடுத்தாண்டிலிருந்து, ரதத்தின் மீது ஏறுவதற்கு, வெளிநாட்டினருக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், கோவிலுக்குள்ளும் வெளிநாட்டினர் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.