பதிவு செய்த நாள்
27
ஜூலை
2013
10:07
திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க வழங்கப்பட்டு வந்த, சுதர்சன டோக்கன் முறை நிறுத்தப்பட்டதால், பக்தர்கள் அவதிப்படுகின்றனர். சாதாரண ஏழை, நடுத்தர மக்கள், ஏழுமலையானை விரைந்து தரிசிக்க வசதியாக, 50 ரூபாய் சுதர்சன டோக்கன் வழங்கப்பட்டு வந்தது. இந்த டோக்கன், நாட்டில் உள்ள முக்கிய நகரங்களிலும், திருமலையில் உள்ள சீனிவாசம், விஷ்ணுவாசம், ஆர்.டி.சி., பேருந்து நிலையம், ரயில் நிலையம், பூதேவி காம்ப்ளக்ஸ், ஸ்ரீவாரி சமிதி, ரேணிகுண்டா ரயில் நிலையம் உள்ளிட்ட பல இடங்களில், சிறப்பு மையங்கள் மூலம், வழங்கப்பட்டு வந்தது. கோடை விடுமுறையில், பக்தர்களின் வருகை அதிகரித்ததால், சிறப்பு மையங்கள் மூடப்பட்டன. இதனால், பக்தர்கள் தரும தரிசனத்திற்காக, நீண்ட நேரம் காத்திருக்க நேரிட்டது. தற்போது, பக்தர் கூட்டம் குறைந்துள்ள நிலையில், சிறப்பு மையங்களை மீண்டும் திறக்குமாறு, தேவஸ்தான அதிகாரிகளிடம், பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், அவர்கள் கேட்கவில்லை. பாத யாத்திரை பக்தர்கள், விரைவில் ஏழுமலையானை தரிசனம் செய்ய முடிவதால், தற்போது திருமலைக்கு வருபவர்கள் தரும தரிசனத்திற்கு பதிலாக, பாத யாத்திரை மூலமாக வரத் துவங்கியுள்ளனர். இதனால், பாத யாத்திரையாக வரும் மலைப்பாதையில், பக்தர் கூட்டம் அதிகரித்துள்ளது.