பதிவு செய்த நாள்
29
ஜூலை
2013
10:07
கும்பகோணம்: ஆதிகும்பேசுவரர் கோவிலில் ருத்ரஹோமம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் திரளாக பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். கோவில் நகரமான கும்பகோணத்தில் உள்ள சிவன் கோவில்களில், ஆதிகும்பேசுவரர் கோவில் பிரளய காலத்துக்கு பின் சுயம்புவாக தோன்றிய கோவில் என்று புராண நூல்கள் கூறுகின்றன. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் சிறப்புடைய இக்கோவிலில், தமிழ்நாடு வர்த்தகர் நலக்கழகம் சார்பில், 96வது ஆண்டு ஆடி, இரண்டாவது வெள்ளி மண்டகப்படி உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது.இதையொட்டி நேற்று முன்தினம் காலை கோவிலில் ருத்ரஹோமம் நடந்து, மூலவர் ஆதிகும்பேசுவரர், மங்களாம்பிகைக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. இதையடுத்து நேற்று மாலை சந்தன காப்பு அலங்காரமும், அன்னதானமும் நடந்தது. இந்த உற்சவத்தை முன்னிட்டு திருக்கோவில் முழுவதும் தோரணங்கள் மற்றும் மின்னொனி அலங்காரம் செய்யப்பட்டது.விழாவை முன்னிட்டு கோவில் அருகே இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. இதில் சென்னை வணிகவரித்துறை இணை கமிஷனர் ஞானப்பிரகாசம், முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் மகேந்திரன், குடந்தை அனைத்து தொழில் கூட்டமைப்பு சங்க செயலாளர் சத்தியநாராயணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.