பதிவு செய்த நாள்
30
ஜூலை
2013
10:07
வெளிப்புறத்தை சரி செய்ய ஆண்டுகள் பலவாகும்: பேய் மழை மற்றும் பெரு வெள்ளத்தால் கடுமையாக சேதமடைந்துள்ள கேதார்நாத் கோவிலின் உட்புறம் சீரானது. வெளிப்புறத்தில் குவிந்து கிடக்கும் பாறைகளை அகற்ற, கனரக இயந்திரங்களை கொண்டு செல்ல முடியாத அளவிற்கு, பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், அப்பகுதியை சரி செய்யும் பணி, அடுத்த ஆண்டு வரை நீடிக்கலாம்.
பேய் மழை : உத்தரகண்ட் மாநிலத்தில், கடந்த மாதம், 16 மற்றும் 17ம் தேதிகளில், பேய் மழை பெய்தது. இதனால், காட்டாறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, மந்தாகினி, அலக்நந்தா, கங்கை நதிகளில் பயங்கர வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், இந்துக்களின் புனிதத்தலங்களான, கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி கோவில்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. குறிப்பாக, கேதார்நாத் கோவில் உள்ளே புகுந்த, மந்தாகினி ஆற்று நீர், கோவிலின் கட்டடத்தை மட்டும் வைத்து விட்டு, உள்ளே இருந்த பொருட்கள் அனைத்தையும் வாரிச்சுருட்டிச் சென்று விட்டது.
பூஜைகள் இல்லை : கோவிலின் உள்ளே, 5 அடி உயரத்திற்கு, மண், பாறை, சகதி குவியல் சேர்ந்திருந்ததால், கோவிலில், இது வரை பூஜைகள் எதுவும் மேற்கொள்ள முடியவில்லை. கோவிலுக்கு வெளியே இருந்த கட்டடங்கள் தகர்ந்து, மலையில் இருந்து உருண்ட பாறைகளால், 8 அடி உயரத்திற்கு கோவில் வளாகம் மூடிக்கிடக்கிறது. அதன் அடியில், ஏராளமானோர் சிக்கிக் கிடப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த இடத்தை, சரி செய்ய, கனரக, ஜே.சி.பி., இயந்திரங்கள் தேவைப்படுகின்றன. சாலை வழியாக, அந்த இயந்திரங்களை கொண்டு செல்ல முடியாத அளவிற்கு, சாலைகள் உருக்குலைந்து கிடக்கின்றன.
எனவே, அந்த இயந்திரங்களை தனித்தனியாக பிரித்து, ஹெலிகாப்டரில் ஏற்றி, கேதார்நாத் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள, தற்காலிக இறங்கு தளத்தில், இறக்கி, அங்கு, அவற்றை ஒன்றிணைத்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், தொடர்ந்து மழை பெய்து வருவதால், அதிக சக்தி வாய்ந்த ஹெலிகாப்டர்களை இயக்க முடியவில்லை. ஹெலிகாப்டர்கள் மூலம் இறக்கி விடப்பட்ட, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் கோவில் கமிட்டி மேற்பார்வையில் பணியிறக்கப்பட்ட பணியாளர்கள், தொல்பொருள் ஆய்வுத்துறையினர், கோவிலின் உட்புறத்தையும், கர்ப்பகிரகத்தையும் சற்றே சரி செய்துள்ளனர். ஆனால், வெளிப்புறங்களின் நிலைமை, கொஞ்சம் கூட சரி செய்யப்படவில்லை; கனரக இயந்திரங்கள் வந்தால் தான், வேலையைத் துவக்க முடியும். ஆனால், மழை விடாது பெய்து வருவதால், நிலைமை அப்படியே உள்ளது. கனரக இயந்திரங்கள் மூலம், அப்பகுதியை சரி செய்ய, 24 மணி நேரமும் முயன்றால் கூட, குறைந்தபட்சம், ஆறு மாதங்கள் வரை ஆகும். வழக்கமாக, அக்டோபர் மாதம், கேதார்நாத் பகுதியில், பலத்த பனிப்பொழிவு இருக்கும் என்பதால், அக்டோபரில் அடைக்கப்படும் கோவில், அடுத்த ஆண்டு, ஏப்ரல் - மே மாதங்களில் தான் திறக்கப்படும். ஆகவே, கோவிலின் வெளிப்பகுதியை சீர் செய்வது, இப்போதைக்கு முடியாது என, கூறப்படுகிறது.