பதிவு செய்த நாள்
30
ஜூலை
2013
10:07
அவிநாசி: மகான்களும், ரிஷிகளும், சித்தர்களும் தோன்றிய புண்ணிய பூமி இந்தியா, என ஆர்.எஸ்.எஸ்., உடற்பயிற்சி பொறுப்பாளர் சபாபதி பேசினார். அவிநாசி தாலுகா ஆர்.எஸ்.எஸ்., சார்பில் குருபூஜை விழா, கோவம்ச திருமண மண்டபத்தில் நடந்தது. வக்கீல் குருசாமி தலைமை வகித்தார். கோவை மண்டல ஆர்.எஸ்.எஸ்., உடற்பயிற்சி பொறுப்பாளர் சபாபதி பேசியதாவது: மகான்களும், ரிஷிகளும், சித்தர்களும் தோன்றிய புண்ணிய பூமி இந்தியா. பல்வேறு விதமான வண்ணங்களை கொண்ட நாட்டை, தொன்மையான பண்பாடு என்ற ஒரு நூல் இணைக்கிறது. காவிரித்தாய், கங்கா, மாதா என்று நதிகளை தாய்மைக்கு ஒப்பிட்ட உயர்ந்த தன்மையை, வெளிநாட்டினர் வியந்து போற்றுகின்றனர். வேறு மதங்களில் இல்லாத பல சிறப்புகள், இந்து மதத்தில் காணப்படுவதாக, சுவாமி விவேகானந்தர் குறிப்பிடுகிறார். சுவாமிஜியின் பல்வேறு சிந்தனைகளை, வெளிநாட்டினர் கடைப்பிடிக்கின்றனர். நமது நாட்டில் சுவாமிஜியை பின்பற்றுவோர் குறைவாக உள்ளனர். இந்நிலை மாற வேண்டும். பாரதம் என்ற ஒரே குடையின் கீழ் அனைவரும் திரண்டால், உலகத்தின் குருவாக, இந்தியா மாறும், என்றார். அவிநாசி தாலுகா பொறுப்பாளர் சிவசங்கர் நன்றி கூறினார்.