பதிவு செய்த நாள்
05
ஆக
2013
10:08
ஒருமுறை, நாயகம் (ஸல்) அவர்களின் துணைவியர் ஒன்று கூடி, ""இறைத்தூதரே! தாங்கள் எங்களுக்குச் செலவுக்காக வழங்கும் பொருள் போதாது. இனிமேல், செலவுத் தொகையை அதிகமாக்கித் தர வேண்டும், என்றனர். இதுகேட்ட நபிகளார், அவர்களிடம் பேசவில்லை. வீட்டை விட்டு வெளியேறி, பள்ளிவாசலிலேயே தங்கிவிட்டார்கள். ஒருநாள், இறைவனின் தூதுவரான ஜிப்ரீல் (அலை) அவர்கள், ஒரு வேத வசனத்துடன் இறங்கி வந்தார்கள். ""நபியே! உங்களுடைய மனைவிகளை நோக்கிக் கூறுங்கள். நீங்களெல்லாம் இந்த உலக வாழ்வையும் அதன் அலங்காரத்தையும் மட்டுமே விரும்புவோராயின், வாருங்கள்... உங்களின் வாழ்க்கைக்கு உரியதைக் கொடுத்து நல்ல முறையில் உங்களை விடுவித்துக் கொள்கிறேன். மேலும், நீங்கள் அல்லாஹ்வின் தூதரையும் (தன்னையும்) மறுமையின் வீட்டையும் விரும்புவோராயின், நிச்சயமாக அல்லாஹ் உங்களிலுள்ள நன்மையை நாடுவோர்க்கு மகத்தான கூலியைத் தயாராக்கி வைத்துள்ளான், என்பதே அந்த வசனம். நாயகம்(ஸல்) அவர்கள் வீட்டுக்குச் சென்று, ஆயிஷா அம்மையாரிடம், இந்த வசனத்தை ஓதிக்காட்டினார்கள். அவர், அதை மற்றவர்களிடம் சொல்ல, அல்லாஹ் மூலம் விடுக்கப்பட்ட அந்த எச்சரிக்கையைக் கேட்டு அவர்கள் திடுக்கிட்டனர். தங்கள் செய்கைக்காக வருந்தினர். அடுத்தவர்கள் அணியும் நகை, ஆடைகளைப் பார்த்துவிட்டு, தனக்கும் அதுபோல் வேண்டும் என நச்சரிக்கும் பெண்கள், இறைவனின் இந்த எச்சரிக்கைக்கு அஞ்சி நடக்க வேண்டும் என்பதே இன்றைய சிந்தனை.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.48
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.29