பதிவு செய்த நாள்
07
ஆக
2013
11:08
ஊட்டி :ஊட்டி கோவிலில், 108 வகை மூலிகை பொருட்களை கொண்டு, ஆடி அமாவாசை பூஜை நடத்தப்பட்டது. ஆடி மாதம் முழுக்க அம்மன் கோவில்களில், ஆன்மிக மணம் கமழும். சில நூறாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்கள், ஆடி மாதத்தில் மூலிகை உணவுகளை உட்கொண்டு, உடலுக்கு உற்சாகம் ஏற்படுத்தி கொண்டனர். அதற்கேற்ப, கோவில்களில், சுத்தமான நெய், பசுவின் பால், கலப்படம் இல்லாத கற்பூரம் உட்பட மருத்துவ குணம் நிறைந்த மூலிகை செடிகளை வைத்து, அபிஷேக, ஆராதனை செய்து வந்தனர். பாரம்பரியங்களின் நினைவு...: காலப்போக்கில், ரசாயனம் கலந்த ஊதுபத்தி, கற்பூரம், கலப்பட தேன், நெய் என, மாறிப்போன நுகர்வு கலாசாரத்தில், மூலிகை சார்ந்த வழிபாடுகளுக்கு விடை கொடுக்கப்பட்டது. மறைந்து போன கலாசாரத்தை நினைவுபடுத்தும் வகையில், ஊட்டி அருகே பிங்கர்போஸ்ட் கேம்ப் முத்துமாரியம்மன் கோவிலில், ஆடி அமாவாசை தினமான நேற்று, மூலிகைகளை வைத்து வழிபாடுகள் நடத்தப்பட்டன. தட்டம்மை, காலரா நோயை குணப்படுத்தும் "சோத்து கற்றாலை, நீலகிரி காடுகளில் கிடைக்கும், கேன்சர் நோயை கட்டுப் படுத்தும் மருத்துவ குணம் நிறைந்த முள் சீத்தா பழம், உடலில் பரவும் விஷத்தை முறிக்கும் ஆற்றல் கொண்ட "கொம்புளி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் "பாடக்கொடி, பல் வலி, அஜீரண கோளாறை சரி செய்யும் "மலை இஞ்சி, தேள் கடி விஷத்தை முறிக்கும் "கருடகொடி, உடல் வலிக்கு உகந்த காட்டு வெற்றிலை, சீறுநீரக கல்லை கரைக்கும் "கல் உருக்கி, வாத நோய்க்கு மருந்தாகும் "குறுத்தொட்டி, எலும்புகளை பலப்படுத்தும் "பிரண்டை என, 108 மூலிகைச் செடிகளை வைத்து அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன. மூலிகைகளில் அபிஷேகம்: கோவில் கருவறையில் வீற்றிருக்கும் அம்மனுக்கு, காய கல்ப மூலிகையில் அபிஷேகம், நறுமண மூலிகை தைலங்கள் மற்றும் மலர்களால் அர்ச்சனைகள் நடத்தப்பட்டன. மூலிகை சாதம் தயாரித்து, பிரசாதமாக வழங்கப்பட் டது. குழந்தைகளை வேப்பிலையில் படுக்க வைத்து, மூலிகை மருந்துகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை "மானஸ் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர். மஞ்சூர்: மஞ்சக்கம்பை எத்தையம்மன் கோவிலில் மாதந்தோறும் அமாவாசை பூஜை சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு காலை 7:00 மணிக்கு கணபதி பூஜையை தொடர்ந்து சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து மாலை வரை நடை திறக்கப்பட்டது. உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளியூர் பக்தர்களும் அதிகளவில் பங்கேற்று வழிபட்ட னர். தொடர் அன்னதானம் வழங்கப்பட்டது.