பதிவு செய்த நாள்
07
ஆக
2013
11:08
திருவள்ளூர் : ஆடி அமாவாசையை ஒட்டி, திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்று, சுவாமி தரிசனம் செய்தனர். திருவள்ளூர் வீரராகவர் கோவில், அகோபிலமட ஆதீன பரம்பரை, ஜீயர்கள் கண்காணிப்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. வீரராகவ பெருமாள் சாலிகோத்ர மகரிஷிக்கு செய்து கொடுத்த பிரமாணத்தின்படி, அமாவாசை தினத்தன்று, வீரராகவரை தரிசித்தால், கஷ்டங்கள் நீங்கும் என்றும், அதேபோல், ஹிருத்தாபநாசினி குளத்தில் நீராடி, வீரராகவரை தரிசனம் செய்தால், நோய்கள் நீங்கி ஆரோக்கியமாக இருப்பர் என்பதும் ஐதீகம். இதையொட்டி, ஒவ்வொரு அமாவாசையன்றும் பிற மாநிலத்தில் இருந்தும், சுற்றுப்புற பகுதிகளில் இருந்தும், பக்தர்கள் முதல் நாள் இரவே கோவிலில் வந்து தங்கி, மறுநாள் குளத்தில் நீராடி, வீரராகவரை தரிசித்து வருகின்றனர். இதன்படி, ஆடி அமாவாசையான நேற்று, ஆயிரக்கணக்கான பக்தர்கள், கோவிலுக்கு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசித்து, தங்கள் நேர்த்திக் கடனை செய்தனர். மேலும், இறந்த முன்னோர்களுக்கு குளக்கரையில் திதி கொடுப்பதும் நடைபெற்றது.
ஆடிப்பூர விழா: ஆடிப்பூர விழாவை ஒட்டி, நான்கு நாட்களாக, வீரராகவர் கோவிலில் உள்ள ஆண்டாள் சன்னிதியில் சிறப்பு பூஜையும், மாடவீதியில் புறப்பாடும் நடைபெற்றது. வரும், 9ம் தேதி, ஆண்டாளுக்கு திருமஞ்சனமும், திருவீதி உலாவும் நடைபெறுகிறது. இதேபோல், தேரடி தீர்த்தீஸ்வரர் கோவிலில், ஆடிப்பூரத்தன்று அம்பாள் திரிபுரசுந்தரிக்கு, காலையில் சிறப்பு அபிஷேகமும், மாலையில், சந்தனக்காப்பு அலங்காரமும், வளையல்களால் அலங்காரமும் நடைபெறும்.