பதிவு செய்த நாள்
08
ஆக
2013
10:08
கோவை:கோவையில் நடக்கும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு2,000த்துக்கும் மேற்பட்ட சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு கோவையில் செப்., மாதம் பிரதிஷ்டைசெய்யப்படுகிறது. இதற்காக, செல்வபுரம் அருகே உள்ள சேத்துமாவாய்க்கால் பகுதியில் விநாயகர்சிலைகள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. ஓடைக்கல் மாவு பேப்பர் கூழ், மூங்கில், சவுக்கு பூட்டுகளை கொண்டு சிலைகள் தயாரிக்கப்படுகிறது. நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பதால் விநாயகர் சிலை தயாரிப்பில், எந்த ரசாயனங்களும் சேர்க்கப்படுவதில்லை. அதிகபட்சம் 14 அடி உயரமுள்ள விநாயகர் சிலை தயாரிக்கப்படுகிறது. ஒரு ஆண்டுக்கு தேவையான 2 ,000 ம் விநாயகர் சிலைக்கான வேலைகளை கடந்த ஆண்டே துவக்கி விடுகின்றனர் கைவினைக்கலைஞர்கள். மூன்று இன்ச் கொண்ட விநாயகர் சிலை முதல் 14 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலை வரை தயாரிக்கின்றனர். வீணை விநாயகர், கம்ப்யூட்டர் விநாயகர், நடன விநாயகர், கற்பகவிநாயகர், மூஞ்சூரு விநாயகர் என்று பல விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. விநாயகர் சிலைகள் மழையில் நனையாமல் பாதுகாப்பாக இருக்க கூறை அமைத்துள்ளனர். பிரம்மாண்டமான சிலைகள் தயாரிக்க ஆகும் ஓடைக்கல் மாவு, காகிதக்கூழ் ஆகியவை அதிக அளவில் இருப்பு வைத்துள்ளனர். விநாயகர் சிலைகள் வடிமைக்கும் பணியில் இருவர் ஈடுபட்டாலும் மற்ற பணிக்கு அதிக எண்ணிக்கையிலான பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவையில் தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள் நீலகிரி, திருப்பூர். ஈரோடு மாவட்டங்களுக்கும், பொள்ளாச்சி, உடுமலை, வால்பாறை, மேட்டுப்பாளையம் பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்படுகிறது.