பதிவு செய்த நாள்
08
ஆக
2013
10:08
சேலம்: ஆடிப்பண்டிகையை முன்னிட்டு, சேலம் மாநகர பகுதியில், உள்ள அம்மன் கோவில்களில், விசேஷ வழிபாடு நடந்தது. கோட்டை பெரியமாரியம்மன் கோவிலில், திரளான பக்தர்கள் பொங்கல் வைத்தும், அலகு குத்தியும், அக்னி கரகம் சுமந்தும், தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். சேலம் மாநகர பகுதியில், கோட்டை மாரியம்மன் கோவில், சின்னக்கடை வீதி திரவுபதி அம்மன் எல்லையம்மாள் கோவில், சின்ன கடை வீதி சின்ன மாரியம்மன் கோவில், கன்னங்குறிச்சி பெரிய மாரியம்மன் கோவில், சஞ்சீவிராயன் பேட்டை மாரியம்மன், காளியம்மன் கோவில், அம்மாப்பேட்டை காளியம்மன் கோவில், குகை, மாரியம்மன், காளியம்மன் மற்றும் முனியப்பன் கோவில், அஸ்தம்பட்டி மாரியம்மன் கோவில், அம்மாப்பேட்டை பலப்பட்டரை மாரியம்மன் கோவில் மற்றும் சாமிநாதபுரம், மணியனூர், குகை, சூரமங்கலம், அம்மாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மாரியம்மன், காளியம்மன் கோவில்களில், கடந்த வாரம் ஆடிப்பண்டிகை விழா துவங்கியது. கடந்த ஒரு வாரமாக, அம்மன் கோவில்களில், விசேஷ பூஜை செய்து, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வந்தது. பெண்கள், பால் குடம் எடுத்தும், பக்தர்களுக்கு, கூல் ஊற்றியும், தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.
சேலத்தில் பிரசித்தி பெற்றது, கோட்டை மாரியம்மன் கோவில் ஆகும். ஆடிப்பண்டிகையை முன்னிட்டு, நேற்று, அம்மனுக்கு தங்க கவசம் சாத்தப்பட்டது. அதிகாலை, 5 மணியில் இருந்து, மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட, "கியூவரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து சென்றனர்.பல்வேறு பகுதியில் இருந்த வந்த பக்தர்கள், கோவில் பிரகாரத்தில், உருளுதண்டம் போட்டனர். காலை, 8 மணி முதல், பெண்கள், பூஜை கூடையுடன் வந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்துவிட்டு, பொங்கலிட்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். சேலம் சாமிநாதபுரம், அஸ்தம்பட்டி, வின்சென்ட், பொன்னம்மாப்பேட்டை, அம்மாப்பேட்டை, செவ்வாய்ப்பேட்டை, குகை, அன்னதானப்பட்டி, தாதகாப்பட்டி, மணியனூர், வீராணம், வாய்க்கால் பட்டறை, கன்னங்குறிச்சி, சின்ன திருப்பதி, கொண்டலாம்பட்டி, ஜாகீர் அம்மாப்பாளையம், ரெட்டிப்பட்டி, சூரமங்கலம், உள்ளிட்ட மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவில்களில், அம்மனுக்கு தங்க கவசம், வெள்ளிக்கவசம் உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டது. அதிகாலை 5 மணியில் இருந்து அம்மன் கோவில்களுக்கு பக்தர்கள் திரண்டு வந்தனர். காலை 10 மணி முதல், பல்வேறு பகுதிகளில் இருந்து தீச்சட்டி கரகம், பூங்கரகம் உள்ளிட்டவற்றை சுமந்தும், கடவாய், எழுமிச்சை, முதுகலகு உள்ளிட்டவற்றை குத்தியும், பெரிய மாரியம்மன் கோவிலை நோக்கி ஊர்வலமாக சென்று, நேர்த்திக்கடனை செலுத்தினர்.கோட்டை மாரியம்மன் கோவிலை தவிர்த்து, மாநகரின் பிற பகுதிகளில் உள்ள கோவில்களில், பக்தர்கள் உருளுத்தண்டம் போடுதல், கிடா, கோழி வெட்டி, பொங்கல் வைத்தல், ஆகியவற்றில் ஈடுபட்டனர். சேலம் மாநகரில் கன்னங்குறிச்சி, அடிவாரம், ஏ.டி.சி.,நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், வேப்பமரங்களுக்கு முன்பு, பூஜை செய்து, பக்தர்கள் "கிடா வெட்டி, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். கோட்டை மாரியம்மன் கோவிலில், பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்ததால், கூட்ட நெரிசலை பயன்படுத்தி, சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்க, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.