பதிவு செய்த நாள்
08
ஆக
2013
10:08
நங்கவள்ளி: தாரமங்கலம், கண்ணனூர் மாரியம்மன் கோவில் திருவிழாவில், நேற்று, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தாரமங்கலத்தில் பிரசித்திப்பெற்ற கண்ணனூர் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடிப்பண்டிகை விழா, 1008 தீர்த்தக்குட ஊர்வலத்துடன், நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்றுக் காலை, 5 மணி முதல் காலை, 11 மணிவரை, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், நீண்ட வரிசையில் நின்று, தீ மிதித்து அம்மனை வழிபட்டனர். ஆயிரக்கணக்கானோர் பொங்கல் வைத்தும், அம்மனுக்கு ஆடு, கோழிகளை பலியிட்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர். பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பக்தர்களுக்காக, விழாக்கால சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கோவில் பண்டிகையை முன்னிட்டு, கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. நாளை, மஞ்சள் நீராட்டு விழாவுடன் பண்டிகை நிறைவடைகிறது.