பதிவு செய்த நாள்
08
ஆக
2013
10:08
சேலம்: சேலம், குகை மாரியம்மன் காளியம்மன் கோவில் குண்டம் விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி, அம்மனை வழிபட்டனர். சேலம், குகை மாரியம்மன் கோவில் ஆடிப்பெருவிழா கடந்த, 23ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. 24ம் தேதி மாரியம்மன், காளியம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. 25ம் தேதி, மாரியம்மனுக்கு திருக்கல்யாணம் மற்றும் கம்பம் நடுதல் நடந்தது. தொடர்ந்து, தினமும் மாரியம்மன், காளியம்மனுக்கு அபிஷேக ஆராதனை மற்றும் மலர் அலங்காரம் நடந்தது. தினமும் இரவு, உற்சவ மூர்த்திகள் ஊர்வலம் நடந்தது. 27ம் தேதி காலை, 10 மணிக்கு கொடியேற்று விழா நடந்தது. கடந்த, 6ம் தேதி இரவு, 8 மணிக்கு சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, நூற்றுக்கணக்கானோர் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். அன்று இரவு, விசேஷ வாண வேடிக்கை நடந்தது. நேற்று காலை, 5 மணிக்கு அபிஷேக ஆராதனையும், பொங்கல் வைபவமும் நடந்தது. நூற்றுக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். மாலை, 4.15 மணிக்கு குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி துவங்கியது. குமர செட்டியார் குடும்பத்தினர், முதலில் குண்டம் இறங்கினர். தொடர்ந்து, கோவில் பூசாரி கார்த்திகேயன் குண்டம் இறங்கினார். அதன் பின், பக்தர்கள் ஒவ்வொருவராக குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். சிலர், குழந்தைகளுடன் குண்டம் இறங்கினர். 3,000க்கும் மேற்பட்டோர் குண்டம் இறங்கி, அம்மனை வழிபட்டனர். இரவு 7 மணி வரை குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. குண்டம் இறங்கும் போது, ஒரு பெண்ணும், ஒரு ஆணும் குண்டத்தில் தவறி விழுந்தனர். இருவருக்கும் லேசான தீக்காயம் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். குகை மாரியம்மன் கோவில் வீரக்குமாரர்கள் குழுவினர் முதலுதவி ஏற்பாடுகளை செய்தனர். இரவு, 10 மணிக்கு உற்சவ மூர்த்திகள் ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து, மர கோட்டை ஜங்கம நண்பர் குழுவினர் சார்பில், ஒயிலாட்டம், கிராமிய நடனம் நடந்தது. இன்று காலை, 6 மணிக்கு மூலவர்களுக்கு அபிஷேக அலங்கார பூஜை நடக்கிறது. மாலை, 4 மணிக்கு மேல் வண்டி வேடிக்கை நிகழ்ச்சி நடக்கிறது.