பதிவு செய்த நாள்
09
ஆக
2013
10:08
திருப்பூர்: திருப்பூர் அருகே, 40 கோடி ரூபாய் மதிப்புள்ள, கோவில் நிலத்தை,நேற்று, அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர். திருப்பூர் அருகே உள்ள, நல்லூர் விசாலாட்சி உடனமர் விஸ்வேஸ்வரர், சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. கோவில் நிலங்கள் குறித்து, அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, காங்கயம் ரோட்டில், விஜயாபுரம் ஒத்தக்கடை பகுதியில், நல்லூர் கோவிலுக்கு சொந்தமான, 3.18 ஏக்கர் நிலம் இருந்தது கண்டறியப்பட்டது. நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த நிலத்தை, இருவர் ஆக்கிரமித்து, விவசாயம் செய்து வந்துள்ளனர். யாரும் நுழையாதபடி, சுற்றிலும் கம்பி வேலி அமைத்து வைத்திருந்ததும், தனியார் மில்லுக்கு, கோவில் நிலத்தில், வழி அமைத்திருந்ததும் தெரியவந்தது. அறநிலையத்துறை அதிகாரிகள், நிலத்தை மீட்டு, கோவிலுக்குச் சொந்தமான நிலம் என, அறிவிப்பு பலகை வைத்தனர். நகர பகுதியில், பிரதான சாலையின் ஓரத்தில், 387 மீட்டர் நீளம், 41.2 மீட்டர் அகலத்தில் நிலம் உள்ளதாலும், பின்பகுதியில், ஒரு சென்ட், 12 லட்ச ரூபாய் வரை, விற்று வருவதாலும், நிலத்தின் மதிப்பு, 40 கோடி ரூபாய் வரை இருக்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.