பதிவு செய்த நாள்
09
ஆக
2013
10:08
வாதவூரில் பிறந்த நம் மாணிக்கவாசகர், இளம் வயதிலேயே பாண்டிய மன்னனால் இனம் காணப்பட்டு, நாட்டின் முதல்வராய் உயர்ந்தவர். ஒரு நாட்டின், ஆளுமைத்திறனுக்கு உற்ற துணையாக பாண்டியனுக்கு பணிபுரிந்த மாணிக்கவாசகருக்கு, ஒரு முக்கிய பொறுப்பு வழங்கப்படுகிறது. நாட்டின் பாதுகாப்புக்காக, படையின் பலம் பெருக்கும் நோக்குடன், குதிரைகள் வாங்கும் பணியின் நிமித்தம், அவர் கோடியக்கரை செல்ல நேர்கிறது. வழியில் ஆவுடையார் கோவிலில், இறைவனை தரிசிக்கச் சென்றார். ஆவுடையார் கோவில், ஓர் அற்புத சிறப்புடையது. அங்கு ஆவுடையில் இல்லை, ஆண்டவன் சிலை; ஆழ்ந்திருக்கும் மனத்தில், அருவத்தில் சில கணம் ஆனந்த தரிசனம், கண்ணால் காண்பதற்கல்ல. கோவிலின் உள்ளே சென்ற பின், உள்ளே செல்ல வைக்கும் உருவமில்லா உன்னதம். தரிசனம் முடிந்த பின் ஆரம்பம், ஓர் தர்ம சங்கடம். காரணம், சீரழிந்த கோவிலின் நிலை. மனதில் ஓர் எண்ணம் உதிக்கிறது. படை வாங்க வந்த பணத்தில், கோவில் கட்டலாம் என்ற எண்ணம். ஓர் உந்துதலில், அவர் கோவிலைச் சீரமைக்கிறார்; குதிரை வாங்க மறுக்கிறார். பாண்டியன் செய்தி அறிந்து, அவரை கைது செய்து, சித்திரவதை செய்கிறான். மாணிக்கவாசகர், குதிரைகள் வரும் என்று உறுதியாகக் கூறுகிறார். ஆவுடையார் கோவிலில், அவருக்கு எவ்வாறு உந்துதல் ஏற்பட்டது? கோவில் கட்டச் சொன்னது யார்? குதிரைகள் வரும் என்ற நம்பிக்கை கொடுத்தது யார்? வாதவூரர் செய்த செயல் சரியா? இறைவனின் தரிசனம், அவருக்குள் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியது? இறைவனுக்காக, அவர் ஏங்கியது ஏன்? முக்கியமாய், அவர் வாழ்ந்த காலத்தைப் பற்றி அறியும் போது, மறைமலை அடிகளின் ஆராய்ச்சி, குறிப்பிடத்தக்கது. மேலும், அவர் திருவெண்பாவில் பாடிய பாடல்கள், ஒரு தந்தையின் நிலையில், அவருக்குண்டான அன்பினையும், பாசத்தையும் பறைசாற்றுகின்றன. இந்த வகையில் மனைவி, மக்கள் கொண்ட, ஒரு தனிப்பற்றுடையத் நந்தையாய் இருந்திருந்தால், எப்படி இருந்திருப்பார் என, எண்ணிப் பார்க்க முடிகிறது. மீண்டு வர முடியாத, அணையில்லா வெள்ளம் போன்ற கருணையால் ஆட்கொள்ளப்பட்டவனை, மீண்டும் முதல் அமைச்சனாய் வரச் சொன்ன மன்னனுக்கு, மாணிக்கவாசகரின் பதில், நம் நாடகத்தின் நிறைவாகி, அவரது அடுத்த கட்ட வாழ்க்கையின் ஆரம்பமாகிறது. நாடக நேரங்கள்: ஆகஸ்ட் 9, 10, 11 - சென்னை தி.நகர், வாணி மகால், நேரம்: மாலை 6:45 மணி மற்றும் ஆகஸ்ட் 11, கூடுதலாய் 3:45 மணி. -
நமது சிறப்பு நிருபர்