பதிவு செய்த நாள்
10
ஆக
2013
10:08
திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில், ஆக, 9 நடந்த ஆடிப்பூரம் விழாவில், பல்லாயிரக்கணக்கானவர்கள் காவடி எடுத்து, அலகு குத்தி மூலவரை தரிசித்தனர்.திருத்தணி முருகன் கோவிலில், ஆடிப்பூரத்தை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளில் இருந்து, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், ஆக 8 இரவே குவிந்தனர். ஆக, 9 அதிகாலை, 5:30 மணி முதல் பக்தர்கள் புனித நீராடி மலர், மயில், பால்காவடி மற்றும் அன்னக்காவடிகளுடன் பக்தி பாடல்களை பாடியவாறு பம்பை, உடுக்கை அடித்தபடி, மலைக் கோவிலுக்கு சென்றனர்.சில பக்தர்கள், வேண்டுதலாக, மொட்டை அடித்து, வாய் மற்றும் உடல் முழுவதும் அலகுகள் குத்தி வந்தனர். பால்குடம் சுமந்தவாறு மலைக்கோவிலுக்கு சென்றும், பலர் முருகப் பெருமானை வழிப்பட்டனர். விழாவை முன்னிட்டு காலை, 10:00 மணிக்கு காவடி மண்டபத்தில் உற்சவருக்கு, 1,008 பால்குட அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. முன்னதாக, அதிகாலை, 4:30 மணிக்கு மூலவருக்கு பால், பன்னீர், தேன், விபூதி, பஞ்சாமிர்தம் போன்ற அபிஷேக பொருட்களால், சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.பின்னர், தங்க கீரிடம், தங்க வேல், பச்சை மாணிக்க மரகதக்கல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் தக்கார் ஜெயசங்கர், இணை ஆணையர்(பொறுப்பு) திருமகள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.