பதிவு செய்த நாள்
12
ஆக
2013
10:08
ராமேஸ்வரம் கோயிலில் தீர்த்தமாடும் பக்தர்களுக்கு, கூடுதல் டிக்கெட் கவுன்டர் இல்லாததால், நீண்ட வரிசையில் வெயிலில் பல மணி நேரம் நின்று அவதிப்படுகின்றனர். ராமேஸ்வரம் கோயிலுக்குள் உள்ள, 22 புனித தீர்த்தத்தை நீராடும் பக்தர்கள், கோயில் நிர்வாகத்திடம் டிக்கெட் (ஒரு நபருக்கு 25 ரூபாய்) வாங்கி, செல்ல வேண்டும். நாளுக்கு நாள் தீர்த்தமாடும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தாலும், இரு டிக்கெட் கவுன்டர் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. இதனால், பக்தர்கள் நீண்ட வரிசையில், நிழல் கூரை இன்றி பல மணி நேரம் வெயிலில் காத்திருந்து, கூட்ட நெரிசலில் சிக்கி, தவித்து டிக்கெட் வாங்க வேண்டிய அவலநிலை உள்ளது. இதில், வயதானவர், குழந்தைகள் மயக்கம் அடைகின்றனர். மேலும், பக்தர்கள் நிற்கும் நடைமேடையில், வியாபார கடைகள் ஆக்கிரமிப்பால், இரு வரிசையில் நிற்கும் பக்தர்கள், சாலையில் நடுவில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அவ்வழியாக செல்லும் வாகனத்தில் சிக்கி, விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. பக்தருக்கு தேவை: தீர்த்தமாட காத்திருக்கும் பக்தர்கள் நடைபாதையில் உள்ள, ஆக்கிரமிப்பு அகற்றி, போக்குவரத்து இடையூறு இன்றி, அகலமான நிழல் கூரையும், திருவிழா, விடுமுறை நாள்களில், கூடுதல் டிக்கெட் கவுண்டர் திறக்க, கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடைபாதையில் குடிநீர் குழாய் அமைக்க, நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும். இதுகுறித்து கோயில் இணை கமிஷனர் செல்வராஜ் கூறியதாவது: வெகு விரைவில் பக்தருக்கான, நிரந்தர நிழல் கூரை, கூடுதல் டிக்கெட் கவுன்டர் அமைக்கப்படும், என்றார். ராமேஸ்வரம் கோயில் ஆடித்திருக்கல்யாண விழாவையொட்டி, பர்வதவர்த்தினி அம்பாள் பூப்பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.