பதிவு செய்த நாள்
19
ஆக
2013
10:08
தஞ்சாவூர்:தஞ்சை பெரிய கோவிலில், பெண் யானைக்கு, முழு ஓய்வு கொடுத்து, அறிவிப்பு பலகை ஒன்றை, கோவில் வாசலில், அதிகாரிகள் வைத்துள்ளனர். தஞ்சை பெரிய கோவில் பெண் யானை வெள்ளையம்மாள், 63, வயதாகி விட்டதால் மூட்டு வலியால் அவதிப்படுகிறது. இதனால், புத்துணர்வு முகாமில் பங்கேற்க தகுதி பெறவில்லை.இந்த யானையை, பெரிய கோவில், இரண்டாம் கோபுர வாசலில், நிற்க வைத்து, வசூலில் பாகன்கள் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. இதை அடுத்து, உதவி பாகன், சாரங்கன், தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.தஞ்சை, அறநிலையத்துறை உதவி கமிஷனர், ஞானசேகரன் கூறியதாவது: யானை வெள்ளையம்மாளுக்கு, மூட்டு வலிக்கான சிகிச்சை, கோவில் வளாகத்துக்கு அருகில் உள்ள கால்நடை மருத்துவமனை மருத்துவர்களால், தரப்படுகிறது. அதன் உடல் நலம் கருதி, பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. யானை குறித்து, பொதுமக்கள் அறியும் வகையில், அறிவிப்பு பலகை வைக்கப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.
தஞ்சை பெரிய கோவில், இரண்டாம் கோபுர வாசலில், அறநிலையத்துறை வைத்துள்ள அறிவிப்பு பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: யானை வெள்ளையம்மாளுக்கு, மருத்துவர்கள் ஆலோசனைப்படி, உணவு வழங்கப்படுகிறது. பக்தர்கள், பழங்கள், தேங்காய் போன்றவை வழங்க வேண்டாம். யானையிடம் ஆசி பெறுவது, போட்டோ எடுப்பது, யானை மீது அமர்வதும், "கண்டிப்பாக கூடாது. பாகன்களிடம் பணமோ, பொருளோ ஏதும் கொடுக்க வேண்டாம். யானைக்காக பொருள் அல்லது பணம் செலுத்த விரும்புவோர், திருக்கோவில் அலுவலகம் அல்லது யானை பராமரிப்பு உண்டியலில் செலுத்த வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.