குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஆக 2013 10:08
திருநெல்வேலி: குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் தேர் திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. குறுக்குத்துறையில் திருவாவடுறை ஆதீனத்திற்கு சொந்தமான பழமைவாய்ந்த சுப்பிரமணிய சுவாமி குகைக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆவணித் தேர் திருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 16ம் தேதி உருகு சட்டசேவையும், சிகப்பு சாத்தி தங்க சப்பரத்தில் நெல்லை மாநகருக்கு எழுந்தருளலும், வெள்ளை சாத்தி, பச்சை சாத்தியும் நடந்தது. தேரோட்டத் திருவிழாவான நேற்று காலையில் தேருக்கு சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளினார். தொடர்ந்து பூஜை நடத்தப்பட்டு, பக்தர்கள் வடம் பிடிக்க தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று (20ம் தேதி) தீர்த்தம் கொடுத்தருளலும், இரவு வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி எழுந்தருளலும், நாளை (21ம் தேதி) தெப்ப உற்சவத்தை முன்னிட்டு பகலில் சுவாமி தெப்ப மண்டபத்திற்கு எழுந்தருளலும், அபிஷேகமும் நடக்கிறது. இரவு மின்சார ஒளியில் தெப்ப உற்சவம் நடக்கிறது.ஏற்பாடுகளை திருவாவடுதுறை ஆதீன கண்காணிப்பாளர் மற்றும் ஊழியர்கள் செய்துள்ளனர்.