Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » கலி விடம்பநம்
கலி விடம்பநம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஆக
2013
01:08

கலி விடம்பநம் பெயரே வித்தியாசமாக உள்ள இந்த நூல் 16 ஆம் நூற்றாண்டில் அவதரித்த நீலகண்ட தீக்ஷிதர் என்ற மகானால் அருளப்பட்டது. கலி விடம்பநம் என்பதற்கு, கலியைக் கண்டு பரிகசிப்பது என்பது பொருள், 102 பாடல்கள் கொண்ட சிறிய நூல் இது. நம்மில் பலரும், ஏதாவது முறைகேடான செயல்களைப் பார்த்தாலோ அல்லது கேட்டாலோ, எல்லாம் கலி காலம்! எங்க போய் முடியப் போறதோ இது? என்று புலம்புகிறோம் அல்லவா? அப்படிப்பட்ட கலியுகத்தின் தோஷங்களைப் பரிகசிக்கிறது இந்த நூல். மற்றொரு விதமாகப் பார்த்தால் தீக்ஷிதரின் வர்ணணை வஞ்சப் புகழ்ச்சியாக இருக்கிறது. நூலின் தொடக்கமே பேச்சு பற்றியதாகத்தான் இருக்கிறது. இப்போதெல்லாம் எங்கு பார்த்தாலும் பேச்சு... பேச்சு... பேச்சு தான்! பேச்சு இருந்தால்தான் வாழ முடியும் என்று ஆகிவிட்டது. அப்படிப்பட்ட பேச்சில் வெற்றி பெற வேண்டும் என்றால் ஐந்து விஷயங்கள் தேவை என்கிறது இந்த நூல். அவை

1. பரபரப்பு இல்லாமல் இருக்க வேண்டும்(இருந்தாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளக் கூடாது)
2. வெட்கப்படக் கூடாது
3. வாதம் செய்பவனை(எதிராளியை) அவமானப்படுத்த வேண்டும்
4. அவன் என்ன சொன்னாலும் சரி! (அதை காதிலேயே வாங்காமல் பலமாகச் சிரிக்க வேண்டும்)
5. அனைத்துக்கும் மேலாக, சபைக்குத் தலைவராக இருப்பவரைப் புகழ்ந்து பேச வேண்டும். இந்த ஐந்தும் இருந்தால் (இந்தக் கலிகாலத்தில்) சபையில் வெற்றி பெறலாம். ஆனால் இவை மட்டும் இருந்தால் போதாது. இன்னும் இரண்டும் தேவை.

விஷயஞானம் இல்லாத ஒருவர் தலைவராகவோ அல்லது நடுவராகவோ இருக்கும் ஒரு மன்றத்தில் (பேச்சாளர்) பேசும்போது, திடீரென பெருங்கூச்சல் போடவேண்டும். ஒருவேளை, அவர் விஷய ஞானம் உள்ளவராக இருந்தால், அவர் பட்சபாதம் பார்க்கிறார் என்று சொல்லி தான் சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். அப்புறம் என்ன? நாம் வெற்றி பெறுவோம். இல்லாவிட்டால், மன்ற நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு ஒத்திவைக்கப்படும். எது எப்படியோ... எதிராளி வெற்றிபெற மாட்டான். அதுதானே நமக்கு வேண்டும்? இதுதான் கலியுகத்தின் பெருமை! வஞ்சனை செய்வாரடி கிளியே! வாய்ச்சொல்லில் வீரரடி... என்ற வரிகளுக்கு ஏற்ப, வாய் ஜாலம் காட்டி, வாய் வீரம். பேசுபவர்களுக்கே காலம். இந்த தகவல்களைச் சொல்லும் பாடல்கள்:

அஸம்ப்ரமோ விலஜ்ஜத்வம்
அவக்யா ப்ரதிவாதிநி
ஹாஸோ ராக்ஞ ஸ்தவச்சேதி
பஞ்சைதே ஜய ஹே தவ
உச்சைருத் கோஷ்ய ஜேதவ்யம்
மத்யஸ்தச்சேத பண்டித
பண்டிதோ யதி தத்ரைவ
பக்ஷ பாதோதி ரோப்யதாம் (கலி விடம்பநம் பாடல்கள் 2-3)

அடுத்து, இரண்டுவிதமான யோகங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார் தீக்ஷிதர். இந்த யோகங்களைப் பற்றி யோக நூல்களில் எல்லாம், வலை(கணினி)போட்டுத் தேடினாலும் கிடைக்காது! திறமையாகப் பொய் சொல்வது, இனிமையாகப் பேசிப் பலரையும் மயக்குவது. இந்த இரண்டும் ஒருவனிடம் இருந்தால் அவனிடம் ஏராளமாகப் பொருள் சேரும். இதற்குப் பெரிதான பொருள் வரவு யோகம் என்று பெயர். இதற்கு நேர்எதிரானது அடுத்த யோகம். அது சத்தியம்(உண்மை), நல்ல கல்வி ஆகிய இரண்டும் ஒருவனிடம் இருந்தால், அவனுக்கு வறுமைதான் கிடைக்கும். அது, பெரிய வறுமை எனும் யோகமாகும். அதாவது, உண்மைக்கும், நல்ல கல்விக்கும் கிடைக்கும் பலன் வறுமைதான் என்கிறார் நீலகண்ø தீக்ஷிதர். பொய், இனிக்க இனிக்கப் பேசி ஏமாற்றுவது ஆகியவற்றின் பலனே செல்வம். இதுதான் கலியுகம் என்றும் சொல்கிறார் அவர். அடுத்த கலியுக மாப்பிள்ளையைப் பற்றி சொல்கிறார்.

மைத்துனன், விவரம் தெரியாத பாலனாக இருக்கிற வரையிலும் மாமியார் வீட்டில் மாப்பிள்ளை வக்கிரமான குணங்களோடுதான் இருப்பான். அதாவது, மாப்பிள்ளை வைத்ததுதான் சட்டம். அதே மைத்துனன், விவரமறிந்து குடும்பப் பொறுப்பை ஏற்கும்போது, மாப்பிள்ளையிடம் உள்ள வக்கிரமெல்லாம் போய்விடும். மாப்பிள்ளை ஒழுங்காக நடப்பான்,. மைத்துனன் நன்றாகக் காலூன்றி விவரமறிந்து, தன் நிலையை நன்றாக உணர்ந்ததும், மாமியார் வீட்டில் இருந்து மாப்பிள்ளை தானாகவே ஓடுவிடுவான். இதேபோல மற்றொரு விதமான மாப்பிள்ளையையும் இந்த நூல் குறிப்பிடுகிறது. ஒருவனுக்கு, மனைவி வீட்டுக்கு மூத்தப் பெண்ணாகவும், மைத்துனன் பாலகனாகவும், மாமியார் மிகவும் சுதந்திரமாக, எல்லாவற்றையும் செய்யும் திறமைசாலியாகவும், மாமனார் அயல் நாட்டுக்குச் சென்றிருப்பவராகவும் அமைந்துவிட்டால்,... அந்த மாப்பிள்ளை பெரும் பாக்கியசாலி என்பதுதான் அந்தத் தகவல். ஒவ்வொன்றைப் பற்றியும் இரண்டு விதங்களாகச் சொல்லிக் கொண்டு வரும் தீக்ஷிதர், வறுமையைப் பற்றியும் இரு விதங்களில் கூறுகிறார்.

எல்லா நோய்களுக்கும் மருந்து என்று ஒன்று உண்டு. எமன் விஷயத்தில்கூட, ம்ருத்யுஞ்ஜய ஜபம் ஹோமம் ஆகியவற்றைச் செய்து, கொஞ்ச காலம் நாட்களைக் கடத்தலாம். ஆனால் வறுமை என்ற விஷயத்தில் அதை தடை செய்யும் வழி, எதுவுமே இல்லை. வறுமையின் கொடுமையை இவ்வாறு விவரித்த நூல், அடுத்த பாடலில் அதே கொடுமையை வேறு விதமாகவும் விவரிக்கிறது. எதிர்மறையாகவும் சொல்கிறது. வறுமையானது பல இடங்களிலும் ஓடித் திரியும்படியான சரீர சக்தியைக் கொடுக்கிறது (எங்காவது ஏதாவது கிடைக்காதா என்று அலைந்து திரிவதைத் தவிர, வேறு வழி ஏது?) குளிரையும் வெயிலையும் தாங்கும்படிச் செய்கிறது. வயிற்றில் இருக்கும் தீயோ எது வந்தாலும் ஜீரணிக்க கூடிய சக்தி படைத்ததாக இருக்கிறது (அஜீரணக் கோளாறுக்கு வழியே இல்லை என்பது கருத்து) ஆகையால், வறுமையே சிறந்த மருந்து. இப்படி வறுமையின் கொடுமையை நகைச்சுவையாகச் சொல்லும் அந்தப் பாடல்.

சக்திம் கரோதி ஸஞ்சாரே
சீதோஷ்ணே மர்ஷயத்யபி
தீபயத்யுதரே வஹ்நிம்
தாரித்ர்யம் பரமௌஷதம் (கலி விடம்பநம் 54 ஆம் பாடல்)

இப்படியாக, கலியுகத்தின் தீமைகளை எல்லாம் விவரிக்கும் இந்த நூல், ஒவ்வொரு தகவலைப் பற்றியும் நேரடியாகவும் நகைச் சுவையாகவும், இரண்டு விதயங்களில் விவரிக்கிறது. சம்ஸ்கிருதத்தில் அமைந்திருக்கும் இந்த நூல் மிகவும் எளிமையான வார்த்தைகளால் அமைக்கப்பட்ட. சிறுசிறு பாடல்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. சம்ஸ்கிருதம் தெரியாவிட்டால்கூட, எளிமையாக நாம் பொருள் உணர்ந்து கொள்ளும்படியாக, அருமையான தமிழ் விளக்கமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. 16-ஆம் நூற்றாண்டில் அவதரித்தவர் எழுதிய இந்த நூலை, பல ஆண்டுகளுக்கு முன்னால், சென்னை பாரிஸில், இருந்த ஸ்ரீகாமகோடிகோசஸ்தானம் என்ற நிறுவனம் வெளியிட்டது. இந்த நூல் தற்போது காஞ்சி ஸ்ரீசங்கர மடத்தில் கிடைக்கிறது.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar