பொங்கலூர்: மனிதர்களுக்கு அன்பு செய்து வாழ்வதே வாழ்க்கை. பிறருக்காக வாழ்பவர்களே உண்மையாக வாழ்பவர்கள், என்று தஞ்சை வேதாத்திரி மகரிஷி ஆசிரம நிறுவனர் அழகர் ராமானுஜம் பேசினார். சுதந்திர போராட்ட தியாகி வீரபாண்டி சுந்தராம்பாள் நினைவு தினம், கள்ளிபாளையம் காம்பிளி அம்மன் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. அவிநாசி ஒன்றிய முன்னாள் தலைவர் பொன்னுசாமி தலைமை வகித்தார். திருப்பூர் மாவட்ட தலைவர் காளிமுத்து வரவேற்றார். கோவை மாநகர் மாவட்ட தலைவர் தங்கராஜ், திருப்பூர் மாவட்ட தென்னை விவசாயிகள் சங்க தலைவர் சண்முக சுந்தரம் முன்னிலை வகித்தனர். தஞ்சை வேதாத்திரி மகரிஷி ஆசிரம நிறுவனர் அழகர் ராமானுஜம் பேசுகையில், ""மனிதர்களுக்கு அன்பு செய்து வாழ்வதே வாழ்க்கை. பிறருக்காக வாழ்பவர்களே உண்மையாக வாழ்பவர்கள். சக மனிதர்களுக்காக வாழும்போது சமுதாயம் உயர்கிறது. ""மக்களை உயர்த்த, மக்களை நெறிப்படுத்த மதங்கள் தோன்றின. துரதிர்ஷ்ட வசமாக மதங்கள் பிணக்கை உருவாக்குகின்றன. அரசியலில் நேர்மையானவர் இல்லாதது உயர்வை தராது. நாட்டின் வளர்ச்சிக்கு வேண்டியது அரசியலுக்கு அப்பாற்பட்ட அமைப்புகளே, என்றார். விவசாயிகள் சங்க தலைவர் பழனிசாமி பேசுகையில், ""தென்னை விவசாயம் செய்த குடும்பங்கள், தென்னையாலேயே அழிந்து வருகின்றன. 100 நாள் திட்டம் மக்களின் உழைக்கும் தகுதியை குறைத்து விட்டது. நுகர்வு குறைவும், பாமாயில் இறக்குமதியுமே தேங்காய் எண்ணெய் விலை குறைய காரணம். அரசு தேங்காயை நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும், என்றார்.கொங்கு வேளாள கவுண்டர் பேரவை மாநில தலைவர் மணிகண்டன், மாவட்ட இலக்கிய அணி தலைவர் பாலு உட்பட பலர் பங்கேற்றனர்.