கிருஷ்ணகிரி: மழை வேண்டி, வலசை சென்ற பெண்கள், வறண்ட நிலத்தில் அமர்ந்து ஒப்பாரி வைத்து அழுதனர். கிருஷ்ணகிரி அடுத்த ஒரப்பம் பஞ்சாயத்துக்கு உட்பட்டது பையனப்பள்ளி கிராமம். இங்கு, 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். வானம் பார்த்த பூமியான இந்த கிராமத்தில் பருவ மழை பொய்து போனதால், விவசாய நிலங்கள் வறண்டு போய்விட்டது. மழை வேண்டி பொதுமக்கள் ஊரை காலி செய்துவிட்டு கால்நடைகளுடன் நேற்று காலை, 8 மணிக்கு வலசை சென்றனர். இதனால், பையனப்பள்ளி கிராமம் வெறிச்சோடி இருந்தது. கிராமத்தில் திருட்டு சம்பவங்கள் நடக்காமல் இருக்க கிராமத்தை சுற்றிலும் இளைஞர்கள் கம்புகளுடன் காவல் காத்தனர். வலசை சென்ற பொதுமக்கள் நிலத்தில் அடுப்பு மூட்டி சமையல் செய்து அம்மனுக்கு படையில் இட்டு பின் குடும்பத்தினருடன் உணவருத்தினர். பெண்கள் வறண்ட நிலத்தில் ஒன்று கூடி ஒப்பாரி வைத்தனர். இவ்வாறு ஒப்பாரி வைத்தால் உடனடியாக மழை வரும் என்பது ஐதீகமாகும். மாலை, 6 மணிக்கு ஆடு மற்றும் கோழிகளை பலியிட்ட பொதுமக்கள் மூட்டை முடிச்சுகள் மற்றும் கால்நடைகளுடன் ஊர் திரும்பினர்.