வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழாவில் இன்று தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஆக 2013 11:08
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுடன் இணைந்த வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழாவில் இன்று காலை தேரோட்டம் நடக்கிறது. திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயிலில் ஆவணித் திருவிழா கடந்த 14ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு கோயில் அதிகாலை நடைதிறக்கப்பட்டு, அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. திருவிழா கொடிப்பட்டமானது கோயிலிலிருந்து புறப்பட்டு, ரதவீதி மற்றும் மாடவீதிகள் வழியாக சென்று மீண்டும் கோயிலுக்கு வந்து காலை கடக லக்னத்தில் கொடிமரத்தில் காப்பு கட்டிய செந்தில் வல்லவராயர் திருவிழாக்கொடியினை ஏற்றினார். திருவிழா நாட்களில் தினசரி காலை, மாலை இரு வேளைகளிலும் அம்மன் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும் பக்தி சொற்பொழிவும் நடந்தது. திருவிழாவின் நிறைவு நாளான பத்தாம் திருவிழாவை முன்னிட்டு இன்று (23-ம் தேதி) அதிகாலை 6 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. திருவிழாவிற்கான ஏற்பாடு களை திருக்கோயில் தக்கார் கோட்டைமணிகண்டன், இணை ஆணையர் (பொ) அன்புமணி, அலுவலக கண் காணிப்பாளர் சாத்தையா மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.