புதுக்கோட்டை: புதுக்கோட்டை சுந்தரவிநாயகர் கோவிலில் கோலாகலமாக நடந்த கும்பாபிஷேகம் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். புதுக்கோட்டை டவுன் தெற்கு 4ம் வீதியில் உள்ளது சுந்தரவிநாயகர் கோவில். இக்கோவிலில் நடந்த திருப்பணி வேலைகளைத் தொடர்ந்து ஆக 23ம் தேதி கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவை முன்னிட்டு கடந்த 21ம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் ஆரம்பமாகியது. ஆக, 23 காலை நான்கு மற்றும் ஐந்துகால யாகசாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து கடம் புறப்பாடு நடந்தது. யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கி கலசம் கோவிலைச் சுற்றி வலம்வந்த பின்னர் சரியாக பகல் 12.15 மணிக்கு கோபுர கலசம் மீது புனிநீர் ஊற்றப்பட்டு மஹாகும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. விழாவில், நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர். ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.