பதிவு செய்த நாள்
24
ஆக
2013
10:08
கோவில்பட்டி : கோவில்பட்டி சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோயிலில் வரலட்சுமி விரத சிறப்பு பூஜை நடந்தது. பொதுவாக வாழ்வில் அனைவரும் அனைத்து விஷயங்களிலும் பெரும்முயற்சி எடுத்துக் கொண்டு செயல்படுவது செல்வம் சேர்க்கவும், வளமான வாழ்க்கையை தேடிக் கொள்ளவும் தான். உலகில் செல்வத்திற்கு அதிபதியாக லட்சுமிதேவியை வணங்கி வழிபட்டு வருகின்றனர். இந்த லட்சுமி தேவியின் அவதாரநாள் சுவாதசி வெள்ளிக்கிழமை என்பதால் அன்றைய தினம் லட்சுமியின் பரிபூரண அருள் கிடைக்குமென பக்தர்கள் நம்புகின்றனர். மேலும் இந்நாளில் பெண்கள் விரதத்தை கடைபிடித்து அன்னையை வழிபட்டால் பெருவாழ்வு கிடைக்கப்பெறுவர் என்பது ஐதீகம். இச்சிறப்பு கொண்ட வரலட்சுமி விரத சிறப்பு பூஜையையொட்டி காலையில் கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து விநாயகர், வள்ளி தேவசேனா சமேத கல்யாண முருகன், சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. இதையடுத்து வரலட்சுமி பூஜைக்காக அம்பாளுக்கு மஞ்சள் சரடுகள், வளையல்கள், பழவகைகள் படைத்து லட்சுமிபூஜை செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடந்தது. சிறப்பு பூஜைகளை சுப்பிரமணியய்யர் செய்தார். விழாவில் கோயில் தலைவர் குருசாமி, பொருளாளர் சுப்பிரமணி, நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு மஞ்சள் சரடு, வளையல்கள், ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தேவகி, ரவிநாராயணன், முருகன், பிரேமா, ஜெய்வைஷ்ணவி, முத்துலட்சுமி, ஜெய்முகேஷ்ராஜா ஆகியோர் செய்திருந்தனர்.