பதிவு செய்த நாள்
27
ஆக
2013
10:08
ஏரல்: உமரிக்காடு முத்தாரம்மன் கோயில் கொடை விழா நடக்கிறது. ஏரல் அருகேயுள்ள உமரிக்காட்டில் அமைந்துள்ள முத்தாரம்மன் கோயில் சிறப்பு வாய்ந்த கோயிலாகும். கொற்கையை தலைநகராக கொண்டு பாண்டிய மன்னர்கள் அரசாண்ட பண்டைய நாளில் உமரிச் செடி என்ற ஒருவகை செடியை பகைவர்கள் வராத வண்ணம் அரணாக வைத்து வளர்த்தனர். எனவே இவ்விடத்திற்கு உமரிக்காடு என்ற பெயர் வந்தது. பொருநை நதியின் வடகரையில் உமரிக்காட்டில் எழுந்தருளிய முத்தாரம்மன் பக்தர்களின் துன்பத்தை நீக்கி எல்லா இன்பங்களும் கொடுக்கும் அம்மனாக அமைந்துள்ளார். இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை ஆவணி மாதம் இரண்டாம் செவ்வாய் கிழமை அம்மனுக்கு கொடை விழா நடக்கிறது. சிங்க வாகனத்தில் அமர்ந்து காட்சி தருவது மேலும் சிறப்பாகும். புகழ்பெற்ற முத்தாரம்மனுக்கு இந்த ஆண்டு கொடை விழா இன்று நடக்கிறது. இன்று காலை 5 மணிக்கு அம்மன் அபிஷேகத்திற்கு தாமிரபரணி கடல் சங்கு முகம் சென்று தீர்த்தம் கொண்டு வருதல், 7 மணிக்கு தீபாராதணை, காலை, மதியம் அன்னதானம், மாலை 5 மணிக்கு அம்மன் அபிஷேகத்திற்கு தாமிரபரணி நதி சென்று புண்ணிய தீர்த்தம் கொண்டு வருதல், இரவு 7 மணிக்கு தீபாராதணையும் நடக்கிறது. இரவு 12 மணிக்கு அம்மன் அலங்கார தீபாராதணை, 12.30 மணிக்கு ஸ்ரீமன் நாராயண சுவாமிக்கு பொங்கலிடுதல், பார் விளையாட்டு, முளைப்பாரி எடுத்தல் நடக்கிறது. நள்ளிரவு 2.30 மணிக்கு அம்மன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி பவனி வந்து ஊர் மக்களுக்கு அருள் புரிதல் ஆகிய கொடை விழா நிகழ்ச்சிகள் நடக்கிறது. தொடர்ந்து நாளை இரவு சென்னை வாழ் உமரிக்காடு நாடார் நலச் சங்கம் சார்பில் சென்னை கலைஞர்களின் பாசப்பறவைகள் இன்னிசை கச்சேரி நடக்கிறது. கொடை விழா ஏற்பாடுகளை உமரிக்காடு கிராம விவசாயிகள் சங்க தலைவர் கிருஷ்ணன் நாடார் தலைமையில் நிர்வாகஸ்தர்கள் இராமசுப்பு நாடார், ஆழ்வார் நாடார், ரமேஷ் நாடார், குமரேசன் நாடார் ஆகியோர் செய்துள்ளனர்.