பதிவு செய்த நாள்
28
ஆக
2013
12:08
இது ஆடி மாதம், அம்பாளுக்குரிய மாதம். இந்த மாதத்தில் அவளது சிறப்பை அறிவோமே! ஒரு தாயானவள், தன்னுடைய குழந்தை நடை பழகித் தத்தி வரும்போது, அக்குழந்தைக்கு விளையாட்டுத் தோழியாகிறாள்; கண்ணாமூச்சி செய்து களிப்பூட்டுகிறாள். கல்வி தரும் ஆசானாகிறாள். குழந்தைக்கும் தந்தைக்கும் இடையே பாலமாகிறாள். சமுதாய அரங்கில், குழந்தையை நிற்கவைக்கும் பீடமாகிறாள். ஜகன்மாதாவான அம்பிகையும் ஜீவன்களுக்காகப் பற்பல நிலைகளை மேற்கொள்கிறாள். வெவ்வேறு உறவுகளில் காட்சி தருகிறாள். பர்வதராஜனான ஹிமவானுக்குப் பார்வதியாகவும், பிரஜாபதியான தட்சனுக்கு தாட்சாயணியாகவும் திரு அவதாரம் செய்தபோது, அவள் குழந்தை வடிவம் கொண்டாள். காத்யாய மகரிஷிக்கு, சாட்சாத் அம்பிகையை மகவாகப் பெறவேண்டும் என்கிற ஆசை இருந்தது. அதனைப் பூர்த்தி செய்ய பச்சிளங்குழவியாகத் தோன்றி வளர்ந்தாள். தட்சப் பிரஜாபதியின் விருப்பமோ சற்று வித்தியாசமாக இருந்தது. அம்பாள் தனக்கு மகளாகவேண்டும் என்கிற நேரடி விருப்பத்தைவிடவும், சிவபெருமான் தனக்கு மாப்பிளையாக வேண்டும் என்பதுதான் அவனுடைய ஆசை. அதற்கு அம்பாள் இணங்கினாள். இப்படிக் குழந்தை வடிவம் கொண்டவள், குமரி வடிவம் தாங்கி, கன்னியாகுமரி திருத்தலத்தில், இறைவனை நோக்கித் தவம் செய்கிறாள். மதுரையில் மீனாட்சியாகி, சுந்தரேஸ்வரப் பெருமானுடைய மனைவியாகப் பெருமிதம் கொள்கிறாள். சகோதர உறவின் சிறப்பைப் புலப்படுத்தும் வகையில், திருமாலின் திருத்தங்கச்சியும் ஆகிறாள். விருத்தாசலத்தில், அம்பாளின் அருள்காட்சி அழகானது; அங்கு, அவள் பாலாம்பிகையாக (வயது குறைந்தவள்) ஒளிர்கிறாள்; விருத்தாம்பிகையாக (வயது முதிர்ந்தவள்) மிளிர்கிறாள். எந்த வடிவம் எடுத்தாலும், அம்பிகையின் உள்ளமெல்லாம் குழந்தைகள் பக்கம் தான் என்பதை விளக்குவதாகவே, திருவாரூரில் அவள் நீலோற்பலாம்பிகை வடிவம் கொள்கிறாள். தனிச்சந்நிதியில் நின்ற திருக்கோலத்தில் அருள் வழங்கும் அம்பிகையின் வலது திருக்கரத்தில் நீலோற்பல மலர் காணப்படுகிறது; இடது கரத்தில். . . . . ? அதுதான் அம்மாவின் சிறப்பு! அம்பிகையின் அருகில் நிற்கும் சேடிப்பெண், அம்பிகையின் இளைய மகனான முருகனைத் தன்னுடைய தோளில் இருத்திக் கொண்டிருக்கிறாள். அம்பிகையோ, செல்வ மகனுடைய கைவிரலைப் பற்றிக் கொண்டிருக்கிறாள். தெய்வமானாலும் தாய், தாய்தானே! அதுசரி, முருகனுக்கும், வேண்டுமானால் பிள்ளையாருக்கும் தாம் இப்படிப்பட்ட கரிசனமா என்ன! இல்லையே. . . அம்பாளைப் பொறுத்தவரை, அவளுடைய இந்தக் கரிசனம், ஜீவன்கள் எல்லாருக்கும் உண்டு. அம்பாளை வெவ்வேறு உறவு நிலையில் மாத்திரமல்ல, வெவ்வேறு வயதினளாகவும் வணங்குகிற வழக்கம் உண்டு. காசியில் சின்னஞ்சிறு குழந்தை, காஞ்சிபுரத்தில் சற்றே வளர்ந்த சிறுமி, நாகப்பட்டினத்தில் பருவமங்கை, திருவாரூரில் பக்குவப்பட்ட இள வயதுக்காரி, மதுரையில் ஆட்சி நடத்தும் சக்கரவர்த்தினி என்பதாக பார்க்கலாம். இப்படி குழந்தை, குமரி, முதியவள் என்றெல்லாம் விதவிதமாக அம்பாளை வழிபடமுடியுமா? இலக்கியத்திலும்புராணத்திலும் சொல்லியிருக்கிற இவற்றை, நாம் செயல்படுத்தமுடியுமா? சாத்தியமா? அம்மாவிடத்தில் எல்லாம் சாத்தியம். மதுரையில், அம்பிகை மீனாளே அர்ச்சகர் மகளாக வேடம் தாங்கிவந்து, குமரகுருபரர் பாடிய பாடலைக் கேட்டுச் சுவைத்துப் பரிசும் கொடுத்தாள். வாக்குக்கும் சொல்லுக்கும் அப்பாற்பட்ட அவளை, சொல்லால் வர்ணித்து, பிள்ளையாய் விவரித்து, குழந்தை வடிவில் கூப்பிட்ட வுடன், அதற்கேற்பக் குழந்தையாகி.... வந்தேவிட்டாள். உறவுகளின் பந்தங்களால் ஏற்படுவதே சம்சாரம். அத்தகைய ச சாரத்திலிருந்தும் பந்தங்களிலிருந்தும் நம்மை விடுவிப்பதற்காகத் தன்னையே உறவாக்கித் தருகிறாள். உறவுகளுக்கு அப்பாற்பட்ட பேரரசியாகவும் அவளே இலங்குகிறாள்.