*பொறுமையின் இலக்கணமான பூமாதேவி, உலக மக்கள் மீது கொண்ட கருணை காரணமாக கோதை என்னும் பெயரில் பூமிக்கு வந்தாள். அவளது பாடல்களைப் படிப்போரின் வாழ்வில் உயர்வு உண்டாகும். *ஆடிப்பூரத்தில் உதித்த ஆண்டாள் மார்கழியின் மகிமையை போற்றுகிறாள். மார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாளால் என்றே திருப்பாவை தொடங்குகிறது. மார்கழியை மார்கசீர்ஷம் என்பர். இதற்கு இறைவனை அடைய வழிகாட்டுவது என்று பொருள். *நோன்பிருக்கும் பெண்களை செல்வச்சிறுமீர்காள் என்று ஆண்டாள் அழைக்கிறாள். இதற்கு காரணம், சின்ன வயதிலேயே கண்ணன் மீது பக்தி செலுத்த தொடங்கி விட வேண்டும் என்பது தான். *ஆண்டாளுக்கு பெரியாழ்வார் இட்ட பெயர் கோதை. நல்வாக்கு அருள்பவள் என்பது இதன் பொருள். இவளை வணங்கினால், மங்கலமான நல்ல சொற்களை மட்டுமே பேசும், கேட்கும் பாக்கியம் கிடைக்கும். *திருப்பாவையில் மூன்று விஷயங்கள் வலியுறுத்தப் படுகின்றன. முதல் பத்து பாடல்கள் மூலம் கடவுளின் திருநாமத்தைச் சொல்லவும், இரண்டாவது பத்து மூலம் கடவுளின் திருவடிகளைப் பூக்களால் அர்ச்சிக்கவும், மூன்றாம் பத்து பாடல்கள் மூலம், அவன் திருவடியில் நம் ஆத்மாவைச் சமர்ப்பிக்கவும் ஆண்டாள் உபதேசிக்கிறாள். *பிறவிச் சக்கரத்தில் இருந்து தப்பிப்பது சுலபம் அல்ல. எத்தனை யாகம் செய்தாலும் பிறவிச்சங்கிலி தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். ஆண்டாள் பாடிய திருப்பாவையை அன்றாடம் படித்தால். பிறவித்துன்பம் அற்றுப் போய்விடும். *கடவுளின் திருமேனியில் சூட்டிய மாலையை பிரசாதமாக நாம் பெற்று மகிழ்வோம். ஆனால், மானிடப் பிறப்பெடுத்த ஆண்டாள் சூடிய மாலையைத் திருமால் விரும்பி அணிந்து கொண்டார். இந்த பாக்கியம் வேறு யாருக்கும் கிடைக்கவில்லை. *ஆண்டாள் எழுதிய வாரணமாயிரம் சூழ வலம் வந்து என்ற பாடலை ஆடிப்பூரத்தன்று படிப்பவர்க்கு விரைவில் திருமண யோகம் உண்டாகும். பேர் செல்லும் விதத்தில், நல்ல குழந்தைகளும் பிறக்கும். *கோதையை ஆண்டாள் என்ற பெயர்சூட்டி ஏன் போற்றுகிறோம் தெரியுமா? பூமாலையும், பாமாலையும் கண்ணனுக்கு சூட்டி மகிழ்ந்த அவள், அன்பினால் அந்தக் கண்ணனையே ஆட்சி செய்தாள். இன்றும் நம் உள்ளங்களில் நீங்கா இடம் பிடித்து ஆட்சி நடத்துகிறாள் என்பதால் தான். *நாம் கண்ணால் பார்க்கும் செல்வமெல்லாம் அழியக் கூடியது. அது சொல்லிக் கொண்டு வருவதுமில்லை, சொல்லிக் கொண்டு செல்வதும் இல்லை. உத்தமமான உயர்ந்த செல்வம் கடவுள் மட்டுமே. அந்த செல்வத்தை பெற நாம் முயற்சிக்க வேண்டும் என்பதே ஆண்டாளின் வாழ்க்கை நமக்கு கற்றுத்தரும் பாடம். -முக்கூர் லட்சுமி நரசிம்மாச்சாரியார்