பதிவு செய்த நாள்
29
ஆக
2013
10:08
பழநி: பழநி மலைக்கோயில் ரோப்கார் கீழ்தளத்தில் மின்மோட்டார் பழுதால், நேற்றிரவு மீண்டும் நிறுத்தப்பட்டது. கடந்த ஜூன் 5ல் பழநி மலைக்கோயில் ரோப்கார் மேல்தளத்தில் கியர் ஷாப்ட் பழுது காரணமாக நிறுத்தப்பட்டு,புதிய ஷாப்ட் பொறுத்தப்பட்டு, மீண்டும், 75நாட்களுக்கு பின், ஆக.20ல் சிறப்பு பூஜைகள் செய்து, இயங்க ஆரம்பித்தது. இந்நிலையில், நேற்றிரவு 7.20 மணிக்கு ரோப்கார் இயங்க ஆரம்பிக்கும்போது, கீழ்தளத்திலுள்ள மின்மோட்டார் புகைந்ததால், உடனடியாக ரோப்கார் நிறுத்தப்பட்டது. ஏற்கனவே, டிக்கெட் பெற்றிருந்த பக்தர்கள் வின்ச் மூலம் மலைகோயிலுக்கு சென்றனர். பழுதான மின்மோட்டாரை கழற்றும் பணி துவங்கியது. பழநி கோயில் இணை ஆணையர்(பொ) ராஜமாணிக்கம் கூறுகையில்,""ரோப்கார் மின்மோட்டார் பழுதுகாரணமாக நிறுத்தப்பட்டது. இரண்டொரு நாட்களில் சரிசெய்யப்பட்டு மீண்டும் ரோப்கார் இயக்கப்படும்,என்றார்.