திருச்செந்தூர் ஆவணி திருவிழா: சுவாமி பச்சை சாத்தி வீதி உலா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03செப் 2013 10:09
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித்திருவிழா எட்டாம் நாளான நேற்று சுவாமி பச்சை சாத்தி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். திருச்செந்தூரில் ஆவணித்திருவிழா கடந்த மாதம் 26-ம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான ஞாயிற்றுக்கிழமையன்று ஏழாம் திருவிழாவை முன்னிட்டு சுவாமி சிவப்பு சாத்தி தங்க சப்பரத்தில் வீதி உலா வந்தார். நேற்று எட்டாம் திருவிழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு மேல் பெரிய வெள்ளிச்சப்பரத்தில் வெள்ளைச் சாத்தி சுவாமி எழுந்தருளி திரு வீதி வலம் வந்து மேலக்கோவில் வந்து, அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பகல் 12 மணிக்கு பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்து திருக்கோவில் வந்து சேர்ந்தார். இன்று ஒன்பதாம் திருவிழாவை முன்னிட்டு சுவாமிதங்க கையிலாய பர்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக் கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவில் நாளை தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை திருக்கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர்(பொ)அன்புமணி, மற்றும் பணியாளர்கள் செய்துள்ளனர்.